சென்னை: வடகிழக்கு பருவமழை என்பது சென்னை மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திச் சென்றுவிட்டது. இத்தனை நடந்த பிறகும் வடகிழக்கு பருவமழை என்றால் என்ன என நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கும். அதனால், வடகிழக்கு பருவமழை என்றால் என்ன? எவ்வளவு மழை கிடைக்கிறது? நிலத்தடி நீர் உயர்வு, குடிநீர் தேவை பூர்த்தியாகிறதா? என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் லோகேஷ் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்தனர்.
வடகிழக்கு பருவமழை குறித்து பூவுலகின் நண்பர்கள் லோகேஷ் கூறுகையில், "இந்திய நிலப்பரப்பை பொறுத்தவரை வடகிழக்கு பருவக்காற்றும், தென் மேற்கு பருவக்காற்றும் மிக முக்கியமானதாகும். வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை பெய்யும் பருவ மழையாகும்.
வடகிழக்கு பருவமழை உருவாது எப்படி?: இந்திய பெருங்கடலின் மீது ஏற்படும் வெப்பம் காரணமாக, கடலின் மேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் ஏற்பட்டு, அங்கிருக்கும் கடல் நீரோட்டம் காற்றாக மாறி, தெற்கிலிருந்து நேராக மேற்கு திசை ஆரவல்லி மலைத்தொடர் வழியாக இமய மலையை அடையும். பின்னர், அந்த காற்று வடக்கிலிருந்து கீழே கிழக்கு நோக்கி நகர்ந்து வரும். இது முழுவதும் பருவக்காற்றை அடிப்படையாகக் கொண்டது.
தென்மேற்கு பருவ காற்று செல்லும் பகுதிகளான கேரளா, கர்நாடகா பகுதிகளில் மழை பொழிந்துவிட்டு செல்லும். அதேபோல, வடகிழக்கு பருவமழை ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வழக்கமாக மழையை பொழிகின்றன. ஆனால், சென்னையை பொறுத்தவரை எப்போதும் 442 மில்லி மீட்டர் அளவு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யக்கூடிய மொத்த மழையின் அளவாகும். எப்பொழுதுமே சென்னைக்கு வடகிழக்கு பருவ மழையால் அதிக அளவு மழை பொழியும். இதனால் நம்முடைய நிலத்தடி நீர் மட்டம், ஏரி, குளங்கள், ஆறுகள் என அனைத்தும் நிறைந்து இருக்கும்.
பருவமழையால் நிலத்தடி நீர் குறையுமா?: இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துவிட்டது. எனவே, ஏற்கனவே நமது பகுதிகளில் நீர்வளங்கள் நிரம்பித்தான் இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழையும் பெய்வதால் நிலத்தடி நீர் நிரப்புவதில் சில பிரச்னைகள் உள்ளன. இப்போது பெய்த கனமழை 20 சென்டி மீட்டர் வரைக்கும் மழைப் பொழிவு ஏற்படலாம் என அறிவித்திருந்த நிலையில், திருவள்ளூர், மணலி, கொளத்தூர் பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கு மேலே மழை பெய்துள்ளது.
இது இயல்பை விட அதிகமாக உள்ளதால் படிப்படியாக உயரக்கூடிய பருவமழை தற்போது ஓரிரு மணி நேரங்களில் பெய்கிறது. இதனால் நிலம் தண்ணீர் உள்வாங்கும் தன்மை என்பது குறைந்து போகிறது. இதன் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு இருக்குறது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் தரவுகளின் படி, 2017-இல் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் என்பது அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது 2023-இன் தரவுகளின் படி தொழிற்சாலைகள், கட்டடங்கள் என அனைத்தும் அதிகமானதால், மேலும் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பருவ மழைகள் அதிகப்படியாக ஒரே நேரத்தில் பெய்வதால் இது மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகின்றன" எனத் தெரிவித்தார்.
இன்னும் அதிக மழை பெய்ய வாய்ப்பு: அதைத் தொடர்ந்து பேசிய தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த், "தமிழகத்தை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட இந்த ஆண்டிற்கான 40 சதவீத மழை பெய்துள்ளது. சென்னையில் சில இடங்களில் 50 முதல் 60 சதவீத அளவும் மழை பெய்துள்ளது. ஆனால், இந்த ஆண்டிற்கான சராசரி மழை அளவில் இருந்து பாதிக்கு பாதி தான் மழை பெய்துள்ளது. அதுவும் வடகிழக்கு பருவமழை காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் இந்த 3 மாதங்களில் கிடைக்கிறது.
இந்த வடகிழக்கு பருவமழை அனைத்து நீர் தேவைகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலத்தடி நீர் என்பது இந்த பருவமழையால் தான் நிரம்பும், இந்த சேமிப்புதான் கோடைகாலங்களில் நீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. தமிழ்நாட்டில் தற்போது இந்த ஆண்டிற்கான பருவமழை என்பது இன்றுவரைக்கும் 14 சென்டி மீட்டர் பெய்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் நான்கில் ஒரு பங்கு மழை பெய்துள்ளது. இன்னும் இரண்டரை மாதத்தில் அதிகமான மழை பொழிய வாய்ப்புள்ளது. இந்த மழையினால் கண்டிப்பாக அடுத்த வருடத்திற்கான குடிநீர் தேவை என்பது பூர்த்தியாகும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்