கோயம்புத்தூர்: மதுக்கரை வனசரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் தற்போது 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால், காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது.
அவ்வாறு வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழையும் காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதோடு, அங்குள்ள தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, கரடிமடை கிராமத்திற்குள் உலா வந்த ஒற்றை ஆண் காட்டு யானை, பிளேக் மாரியம்மன் கோயில் பகுதியில், விஷ்ணு என்பவரது தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அங்கு வீட்டின் வெளியில் நாகம்மாள் (70) என்ற மூதாட்டி தூங்கி கொண்டிருந்துள்ளார். சத்தம் கேட்டு மூதாட்டி எழுந்து பார்க்கையில், திடீரென அவருக்கு எதிரே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை மூதாட்டியை தாக்கியுள்ளது.
இதில், கீழே விழுந்த மூதாட்டி தலையில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதனையடுத்து, மூதாட்டி சத்தம் போட்டதால் அங்கிருந்து நகர்ந்த யானை அருகில் இருந்த மற்றொரு வீட்டில் வைத்திருந்த அரிசியை எடுக்க முயன்றுள்ளது. அரிசியை யானை எடுக்க முயன்ற நிலையில், வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்த தனலட்சுமி (40) மற்றும் சத்தியா இருவரையும் தாக்கியதில் இருவரும் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்த பணியாட்கள் சத்தம் போட்டதால் யானை அப்பகுதியில் இருந்து வெளியேறியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுக்கரை வனத்துறையினர், வனப்பகுதியில் இருந்து குடியிருப்புக்குள் புகுந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்து, யானை தாக்கியதில் காயமடைந்தவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உணவுத் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்புக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை, வீட்டின் வெளியில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கீழே தள்ளி தாக்கியுள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: அயன் பட பாணியில் ஷூவில் மறைத்து தங்கம் கடத்தல்.. ரூ.5 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் ஆசாமி!