தேனி: திருமணம் மீறிய உறவிற்கு தடையாக இருந்ததாகக் கருதி, கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கண்மாயில், கடந்த 2016ஆம் ஆண்டு, எழுவனம்பட்டியைச் சேர்ந்த ராமன் என்பவரது உடல், பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், ராமனின் மனைவி சந்தான லட்சுமி என்பவர் சுரேஷ் என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்ததுள்ளார். அந்த உறவிற்கு இடையூறாக இருந்ததால் சந்தான லட்சுமி, சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து கணவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாக தெரிவித்த காவல்துறை, கூடவே உறவினரான செல்லத்துரை, பாண்டி ஆகியோரைத் துணைக்கு சேர்த்துக் கொண்டு கண்மாய் அருகே ராமனை வரவழைத்து கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்ததுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கணவரைக் கொன்ற மனைவி உள்பட நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெரியகுளம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று (டிசம்பர் 10) செவ்வாய்க்கிழமை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சமீனா கீழ் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: "அன்னிய செலாவணி மோசடி வழக்கின் குற்றப் பதிவில் சசிகலாவின் பெயர் மாற்றப்பட்டது ஏன்?" - உயர் நீதிமன்றம் கேள்வி!
அப்போது, வழக்கு விசாரணை முடிவுற்று, சாட்சியங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில், நான்கு நபர்களும் கொலை குற்றவாளிகள் எனத் தீர்மானித்த நீதிபதி, சந்தான லட்சுமி உள்பட நான்கு நபர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு, தலா ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். மேலும், இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து, குற்றவாளிகள் நான்கு பேரையும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.