ஈரோடு: சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை யானை தாக்கி உயிரிழந்த நிலையில், இதன் துக்கம் தாங்காமல் மனைவியும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி, அணைக்கரை பைரமரத் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாறன் (வயது 55). இவரது மனைவி சன்மாதி (40). இவர்களுக்கு சடையப்பன் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். இவர் தனது விவசாய தோட்டத்தில், மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார்.
பயிர்களை காட்டுப் பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக தினமும் இரவில் நிலத்திற்கு காவலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் (நவ.17) காவலுக்குச் சென்றுள்ளார். அப்போது நிலத்தில் உலவிக் கொண்டிருந்த காட்டுப்பன்றிகளை அவர் துரத்தியுள்ளார்.
அப்போது காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை மக்காச்சோளக்காட்டில் மறைந்திருந்து நிலையில், அப்பகுதிக்கு வந்த மாறனை தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனியில் காட்டு மாடு தாக்கி விவசாயி படுகாயம்!
இதனையடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடல், நேற்று (நவ.18) இரவு அவரது மகன் சடையப்பனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், அவரது உடல் சொந்த ஊரான பைரமர தொட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சடங்குகள் செய்யப்பட்டு உடலை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது மாறனின் மனைவி சன்மாதி அழுதபடியே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் இன்று ( நவ.19) அடக்கம் செய்யப்பட உள்ளது.
கணவன் இறந்த துக்கம் தாளாமல், மனைவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கடம்பூர் மலைப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. யானை தாக்கி உயிரிழந்தால், வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவது வழக்கம். அதன்படி, முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை விவசாயி மாறன் குடும்பத்துக்கு வனத்துறையினர் வழங்க உள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்