தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரை அடுத்த ஆலடிவிளையைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் பிரபு சாலமன் (35). மனைவி மேரி. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு, உடமைகளை இழந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சி அருகே உள்ள வெள்ளாளன் விளை பகுதியைச் சேர்ந்த சிம்சன் ராஜ் என்பவர், கர்நாடக மாநிலம், தாவணிக்கரை பகுதியில் நடத்திவரும் மிட்டாய் கம்பெனியில் தங்கி சரக்கு வேன் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று தனது செல்போனில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய தாவணிக்கரை அருகே உள்ள பழைய பூதல் ரோடு பஜாருக்குச் சென்றுள்ளார். அங்கு தனது செல்போனை பழுது பார்த்து விட்டு பிரபு சாலமன் தனது அறைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, அங்கே வந்த கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பேர், பிரபு சாலமனை மறித்து அவருடைய செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, அந்த இரண்டு பேரும், அவர்களது கூட்டாளிகள் ஐந்து பேரை வரவழைத்து ஏழு பேரும் பிரபு சாலமனை தாக்கி ஆட்டோவில் ஏற்றி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று அரை நிர்வாணப்படுத்தியதுடன், அவரை கட்டை உள்ளிட்ட பொருட்களால் கண், தலை மற்றும் உடல் முழுவதும் கொடூரமாக தாக்கியுள்ளதாக அவரது மனைவி கூறியுள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்ட அந்த கும்பல், “தமிழ்நாட்டுகாரர்கள் எதற்கு இங்கே வருகிறீர்கள்? உங்கள் ஊரிலே வேலை பார்க்க வேண்டியதானே? இங்கே வந்து எங்கள் வேலையை எதற்கு கெடுக்கிறீர்கள்?” என்று கூறி தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த கும்பல் தாக்கியதில் மயக்கம் அடைந்த பிரபு சாலமன், பின்னர் மயக்கம் தெளிந்த பின் எழுந்து தள்ளாடியபடி அருகே இருந்த பூதல் ரோடு சோதனைச் சாவடிக்கு சென்றுள்ளார்.
அங்கே இருந்த 3 காவலர்களிடம் 7 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றதாகக் கூறியதாகவும், இதைக் கேட்ட கர்நாடக காவலர்களும் சாலமனை முட்டி போடச் செய்து, “நீங்கள் தமிழ் ஆட்கள், இங்கே வந்து எங்கள் ஊர் ஆள்களையே குறை சொல்கிறீர்களா?” என்று கூறி அவரை திட்டியதுடன், பிரபு சாலமனை தாக்கிய கும்பலையும் வரவழைத்து, இவரை அவர்களிடம் ஒப்படைத்த போலீசார், வேறு எங்கேயாவது கூட்டி சென்று தாக்குங்கள் என்று கூறியதாகவும் அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து மீண்டும் அந்த கும்பல் அடித்து அவரை துன்புறுத்தி அங்குள்ள சாக்கடை கால்வாயில் போட்டதாகவும், பின்பு, மயக்க நிலையில் இருந்த பிரபு சாலமனை அப்பகுதிக்கு வந்த விவசாயி ஒருவர் மீட்டு, அவரை சொந்த ஊருக்குச் செல்ல கூறியதாகவும், பின் அங்கிருந்து தப்பி வந்த பிரபு சாலமன் மூன்று நாட்களாக எந்த வேலையும் செய்ய முடியாமல் உடலில் காயங்களுடன் தனது மிட்டாய் கம்பெனி அறையிலேயே இருந்ததாகவும் மனைவி மேரி கூறுகிறார்.
இதைத் தொடர்ந்து, பிரபுவின் உறவினர்கள் மற்றும் மனைவி சொந்த ஊருக்கு திரும்பச் சொல்லியதை தொடர்ந்து, நேற்று பிரபு சாலமன் சொந்த ஊரான குரும்பூருக்கு திரும்பியுள்ளார். உடல் மற்றும் கண்களில் ஏற்பட்ட காயம் காரணமாக கண் பார்வை குறைபாடு, உடலில் ஏற்பட்ட காயங்களுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உடற்சோதனை செய்ததில், அவரது நுரையீரலில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, இரத்தம் உறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பிரபு சாலமன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தனது கணவரை அடித்து துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி நிர்மலா மேரி புகார் அளித்துள்ளார்.
ஆனால், அங்கிருந்த ஏடிஎஸ்பி ஒருவர், “அவர் கர்நாடகாவில் துன்புறுத்தப்பட்டுள்ளார். என்னால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கவும் முடியாது, தேடவும் முடியாது. எங்களுக்கு அங்குள்ள மொழி தெரியாது. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. மேலும், இன்ஸ்பெக்டரை தொடர்பு சொல்லக் கூறுவதாக” கூறி அங்கிருந்து அனுப்பியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை அவரது மனைவி முன்வைத்துள்ளார். ஆனால் தற்போது வரை எந்தக் காவலரும் எங்களை அழைக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒன்றல்ல, இரண்டல்ல.. பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; நாகர்கோவிலில் அடுத்த அதிர்ச்சி! - nagercoil teacher pocso case