தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி (30) என்பவருக்கும், பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த மனோன்மணி (27) என்ற பெண்ணுக்கும், கடந்த 2022ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிந்துள்ளது.
திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் பெண் அணிந்திருந்த 30 பவுன் நகையை கணவர் முத்துப்பாண்டி வாங்கி விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதன் பின் சுற்றியுள்ள உறவினர்களிடம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் விட்ட நிலையில், கணவரின் செயல் குறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் மனோன்மணி மற்றும் அவரது பெற்றோர் ஓராண்டிற்கு முன்பு புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், கணவர் முத்துப்பாண்டி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இது தொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மனோன்மணி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று (செப்.1) மாலை அப்பெண் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் உயிரிழந்த பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் தாய் கீதா கூறுகையில், "என் மகள் இறப்புக்கு காரணம் ஆன்லைன் சூதாட்டம் தான். முறையாக விசாரிக்காமல் பெண்ணை கட்டிக் கொடுத்ததால் தற்பொழுது என் மகளை இழந்துள்ளேன். இது போன்ற நிகழ்வு இனி நடக்காமல் இருக்க பெண் வீட்டார் மணமகனின் நடவடிக்கை குறித்து நல்ல விசாரணை செய்து பெண்ணைக் கொடுக்க வேண்டும். என் மகள் தற்கொலைக்கு காரணமான முத்துப்பாண்டியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்