தேனி: தேனி மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமை அவரை வேட்பாளராக அறிவித்ததைத் தொடர்ந்து, கட்சித் தலைவர்களை மற்றும் திமுக நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவைப் பெற்று வருகிறார்.
அதன்படி, நேற்று பழனிச்செட்டிபட்டியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கேட்டு, அவர்களுடன் சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில், இன்று போடி நகர் பகுதியில் உள்ள திமுக கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவைப் பெறுவதற்காக வந்தார்.
அவருக்கு திமுக நிர்வாகிகள் மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, போடியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் டொடர்ந்து, திமுக தேர்தல் பணிமனைகளை திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் தங்க தமிழ்செல்வன் பேசுகையில், “தேனி நாடாளுமன்றத் தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் நின்று தோல்வியடைந்த தொகுதி. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40க்கு 39 இடங்களில் வெற்றி பெற்றது. ஒன்றில் மட்டும் தோல்வியைச் சந்தித்தோம் என்றால், அது தேனி நாடாளுமன்றத் தொகுதிதான்.
இந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் காங்கிரஸ் கேட்டது. ஆனால், அந்த சவாலான தொகுதியை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம், உங்களுக்கு எது வேண்டும் எனக் கேட்ட போது, திருநெல்வேலி தொகுதியைக் கேட்டார்கள், அதைக் கொடுத்தோம்.
திருநெல்வேலி தொகுதி திமுகவிற்குச் சாதகமான தொகுதியாகும். காங்கிரஸிற்கு ஆதரவாக அந்த தொகுதியை கொடுத்தார் ஸ்டாலின். திண்டுக்கல்லில் இருந்து போடி வழியாக குமுளிக்கு ரயில் பாதை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், ஓபிஎஸ்-க்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த உங்களை, கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் சந்திக்கவில்லை.
வெறும் மாவட்டச் செயலாளராக இருந்து கொண்டு நான் நாள்தோறும் மக்களைச் சந்தித்து வருகிறேன். என்னை தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், போடி கொட்டகுடி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி விவசாயம் செழிக்க பாடுபடுவேன். நான் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், என்னை சட்டையைப் பிடித்து கேட்கலாம்" என அவர் பேசினார்.
இதையும் படிங்க: வாக்கிங் சென்றவாறே வாக்கு வேட்டை.. சாலையோர கடையில் தேநீர்.. தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலின் விறுவிறுப்பு! - Cm Stalin Collect Votes