சென்னை: "வருமையின் நிறமா சிவப்பு அதை மாற்றும் நிறமே சிவப்பு" என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்போம். உணர்ச்சி பொங்கப் பொங்க இருக்கும் அந்த பாடல் வரிகள் மொத்தமும் இந்த மே தினத்தையும், உழைக்கும் வர்க்கத்தையும், சிவப்பு நிறத்தையும் மையப்படுத்தியே இருக்கும். மே தினத்திற்கும், சிவப்பு நிறத்திற்கும் அப்படி என்ன தொடர்பு.
அது கம்யூனிசத்தின் கோடி என்பதா? இல்லை கட்சியின் கொடி என்பதா? அதையெல்லாம் தாண்டி உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை மீட்கவும், தொழிலாளர் இனத்தை என்றென்றும் பாதுகாக்கவும் வேண்டி பலர் ரத்தம் சிந்தியுள்ளனர். உரிமையை மீட்டெடுக்க எத்தனை ரத்தம் சிந்தினாலும் புரட்சி செய்யும் போராளிகள் தொழிலாளர் வர்க்கத்தில் பிறந்துகொண்டேதான் இருப்பார்கள் என்பதை நினைவூட்டுகிறது அந்த சிவப்பு.
அந்த சிவப்பு நிறத்திற்குப் பின்னால் ஏராளம் தலைவர்களின் வரலாறும், தொழிலாளர் வர்க்கத்திற்காக அவர்கள் மேற்கொண்ட புரட்சிகர சம்பவங்களும் மேலோங்கி நிற்கிறது. கார்ல் மார்க்ஸ் தொடங்கி தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் வரை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தியாவில் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முதன் முதலில் கொண்டாடிய பெருமை சிங்காரவேலரையே சேறும்.
இது குறித்து சிங்காரவேலர் அறக்கட்டளையின் அறங்காவலர் ப.வீரமணி ஈடிவி பாரத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். அதில் "மே தினம்" என்பது தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை எனக்கூறினார். மேலும், பல்வேறு உழைப்புச் சுரண்டல்களுக்கு மத்தியில், தொழிலாளர்களின் தகுதிக்காகப் போராடிய நாளை தொழிலாளர்கள் கொண்டாடும் நாளே மே தினம் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 1923ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் வைத்து நடைபெற்ற முதல் தொழிலாளர் தின கொண்டாட நிகழ்வு குறித்து நினைவு கூர்ந்தார். அப்போது, அந்த முதல் மே தினக்கொண்டாட்டத்தில் சிங்காரவேலர் முழுக்க முழுக்க உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் புரட்சிகர உரையை ஆற்றினார் எனவும், ப.வீரமணி தெரிவித்தார். மேலும், "மனித வர்க்கத்தின் ஏறக்குறைய எல்லாத் தீங்குகளையும் போக்கிச் செம்மையுறச் செய்யும் குறிக்கோளைக் கொண்ட ஒரு நெறி அல்லது தத்துவம் ஒன்று உள்ளதே என்றால் அதுதான் கம்யூனிசம்" என சிங்காரவேலர் கூறியதையும், பெரியாரின் பொதுவுடைமை கூட்டங்கள் பலவற்றில் பங்கேற்று அவர் பேசியதையும் விளக்கினார்.
அதிலும் குறிப்பாக "தொழிலாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் மே 1ம் தேதியைத் தொழிலாளர் தினமாக அறிவித்து விடுமுறை அளிக்க வேண்டும். வேலை நேரம் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 8 மணிநேரமும், பெண்களுக்கு 6 மணிநேரமும் மட்டுமே இருக்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்குப் பிரசவத்திற்கு முன் மூன்று மாதங்கள் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு மூன்று மாதங்கள் உட்பட ஆறு மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும், குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும்" அவர் தெரிவித்தார்.
15 மணி நேரத்தில் இருந்து 18 மணி நேரம் வரை வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை, அதற்கேற்ற ஊதியம், வார விடுப்பு உள்ளிட்ட பல உரிமைகளை மீட்டெடுத்த நிகழ்வைக் கொண்டாடவும், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக ஒரு குரல் உயருகிறது என்றால் அங்கு மீண்டும் புரட்சி வெடிக்கும் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கவும் வேண்டியே இந்த மே 1 தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
சலவை தொழில் செய்பவர் தொடங்கி, சாக்கடை சுத்தம் செய்பவர் மட்டும் இன்றி மக்கள் சேவைக்காக படித்து மாவட்ட ஆட்சியர் பொருப்பில் இருந்தாலும் தொழிலாளர் என்ற அடிப்படையில் அனைவருக்கும் சமமான உரிமைகளும், தேவைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே மே 1 உணர்த்தும் உண்ணதமான கருத்து. தொழிலாளர்களாக இந்த தினத்தைக் கொண்டாடுவோம்..! தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய போராளிகளை இந்த நாளில் நினைவு கூறுவோம்.
இதையும் படிங்க: 'பன்முகக் கலைஞர்' தலைப்பில் 10-ஆம் வகுப்பு பாடத்தில் கருணாநிதி வரலாறு.. சிறப்புத் தொகுப்பு! - Karunanidhi History In School Book