சென்னை: உலக அளவில் 7 வகையான கடல் ஆமைகள் உள்ளன. இந்தியாவில் ஆலிவ்ரெட்லி டர்டில், லெதர் பேக் டர்டில், ஆக்ஸ்பில் டர்டில், கீரின் டர்டில், லாகர்ஹெட் டர்டில் போன்ற 5 வகையான கடல் ஆமைகள் இருக்கிறது. கடல் சுற்றுச்சூழலில் மிக முக்கிய பங்காற்றும் கடல் ஆமைகள், கடலில் மீன் பிடிக்கும் போது அடிக்கடி இழுவை வலையில் சிக்கிக் கொள்கின்றன.
இவை அழிந்து வரும் உயிரினம் என்பதால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-இன் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆமைகள் கடலில் உணவுச் சங்கிலியைப் பாதுகாக்கும் உயிரினமாகும். மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீன் கடல் வளம் என இரண்டும் பாதிப்படையாத வகையில் சரிசமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அமெரிக்கா ஒரு பொதுச்சட்டத்தை 2019ஆம் ஆண்டு கொண்டுவந்தது.
தடை செய்யப்பட்ட இந்திய இறால் இறக்குமதி: இந்த சட்டத்தால் இந்திய கடல் உயிரின ஏற்றுமதிக்கு என்ன பாதிப்பு என்பதை அறிய ஈடிவி பாரத் விரும்பியது. இந்த நிலையில், இது தொடர்பான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளித்த கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் மீன் தர மேலாண்மை மற்றும் நிலையான மீன்பிடித்தலுக்கான துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள் மூர்த்தி கூறுகையில், “கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா ஒரு பொதுச்சட்டம் 101-162 (பிரிவு 609) கொண்டு வந்தது. இச்சட்டத்தின் படி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் எந்த கடல் உணவு வகைகளையும் பிடிக்கும் போது கடல் ஆமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது கட்டாயமாகும்.
அதன்படி, அனைத்து மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனத்தை (Turtle Excluder devices) அமைக்க வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனத்தை (Ted) பயன்படுத்தாத நாடுகளில் இருந்து கடல் இறால்களை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா தடை விதித்துவிட்டது.
இதையும் படிங்க: மீன் விரும்பி உண்பவரா நீங்க? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!
அதன்படி, இந்தியாவில் உள்ள மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனம் இல்லை என்பதால் இந்திய கடல் இறால்களுக்கு 2019ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிற்கு ஆண்டுக்கு 4,500 கோடி முதல் 5,000 கோடி ரூபாய் வரை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்றுமதி தடையை நீக்குவதற்காக கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஏற்கனவே மீன்பிடி வலைகளில் ஆமை விலக்கு சாதனத்தை புதிதாக வடிவமைத்து அமெரிக்க மீன்வளத்துறை அதிகாரிகளை அழைத்து காண்பித்தோம். ஆனால், அந்த வலைகளில் ஆமை வெளிவருவதில் பெரும் சிரமம் இருக்கும் எனக் கூறி அவர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, இந்தியாவில் இருந்து கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் அதிகாரிகளும், மீன்வளத்துறை ஆராய்ச்சியாளர்களும் அமெரிக்கா சென்று மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனத்தை தயாரிக்கும் முறைகளை பயிற்சி எடுத்து வந்தனர்.
ஆமை விலக்கு சாதனத்துடன் இழுவை வலை: இதையடுத்து, இந்தியாவில் மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனத்தை தயாரித்து, அமெரிக்கா மீன்வளத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சோதனை செய்து காட்டியதை அடுத்து, இந்த மீன்பிடி இழுவை சாதனத்திற்கு அமெரிக்கா அங்கீகாரம் அளித்தது.
எனவே, நாம் தற்போது மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் இடத்தில் உள்ளோம். எனவே, தற்போது கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மீன்வளத் துறையுடன் இணைந்து, மீன்பிடித் துறைமுகங்களில் மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறோம்.
பயிற்சியில் இந்தியா: இந்தியா முழுவதும் மாநில அளவிலான பங்குதாரர்களுக்கான பயிலரங்கம் நடத்தி வருகிறது. இந்திய மீன்வளத்துறை அந்தந்த மாநில மீன்வளத் துறையுடனும் ஆலோசித்து முடிவு எடுத்துள்ளது. எனவே, நாம் மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனத்தை பயன்படுத்துவதில் இறுதி கட்டத்தில் உள்ளோம்.
இந்த மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனத்தை முறைப்படி பயன்படுத்துவது குறித்து மீனவர்கள் சோதனை (Trail) செய்து பார்க்க வேண்டும் எனக் கூறுவதால், இந்தியா முழுவதும் 200- 300 முறை அந்த மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனத்தை அந்தந்த மாநில மீன்வளத்துறையுடன் இணைந்து மீனவர்களுக்கு சோதனை செய்து காட்டப்பட்டு, மீனவர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முறை: கடலில் மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனத்தை பயன்படுத்தி ஒருமுறையும், ஆமை விலக்கு சாதனத்தை பயன்படுத்தாமல் ஒரு முறையும் மீன்களைப் பிடிக்க வைத்து, பிடிக்கப்பட்ட மீன்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கச் செய்து மீனவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறோம்.
இந்த மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதன பயிற்சி முடிந்த உடன், இந்தியாவில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும், குறிப்பாக, இறால் பிடிக்கும் விசைப்படகுகளில் மீன்பிடி இழுவை வலைகளில் ஆமை விலக்கு சாதனத்தை பொருத்தும் பணியில், அந்தந்த மாநில மீன்வளத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
ஆமைகளை பாதுகாக்கும் வளர்ந்த நாடுகள்: கடல் இறால்களை பொறுத்தவரையில், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து அதிக அளவு அமெரிக்க நாட்டுக்கு அனுப்பப்பட்டு வந்தது. சர்வதேச சந்தையில் 2018ஆம் ஆண்டுகளில் 1 கிலோ கடல் இறால் 10 டாலர் என விற்கப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்கா நாட்டின் ஏற்றுமதி தடைக்கு பிறகு கடல் இறால் தேவை குறைந்துவிட்டதால், சர்வதேச சந்தையில் கடல் இறால் 1 கிலோ 3 டாலர் தான் செல்கிறது.
இந்திய கடல் இறால்கள் ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்திவிட்டாலும், வளர்ப்பு இறால்களை இந்தியாவிலிருந்து 85% அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடல் இறால்கள் அமெரிக்கா தடை விதித்துவிட்டதால் உள்நாட்டில் கடல் இறால்களின் விலை குறைவாக கிடைக்கிறது. ஆமைகள் இனப்பெருக்கத்தின் போது 40-50 முட்டைகளிட்டாலும், 2 அல்லது 3 தான் உயிர் பிழைக்கிறது. எனவே, அழிந்து வரும் ஆமைகளை பாதுகாக்க வளர்ந்த நாடுகள் இதுபோன்ற முயற்சி எடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.