சென்னை: நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரம் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமாக நடைபெறும் இந்த நாடாளுமன்றத் தேர்தல், ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தலாக உள்ளது. ஏனெனில், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிமுக - திமுக ஆகிய இரண்டு மாபெரும் கட்சிகளுக்கு இடையே மட்டும் நிலவி வந்த தேர்தல் போட்டியில் தற்போது பல்வேறு கட்சிகளும் நுழைந்துள்ளன எனலாம்.
அந்தவகையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக ஒரு தனி கூட்டணியாக உருவெடுத்துள்ளது. இதில், அமமுக, பாமக, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
அதேபோல, மேலே கண்ட அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி என எதிலும் சேராமல் தனித்து களம் காணுவதும், மக்களிடையே தமிழையும் தமிழர்களின் உரிமையை காப்பாற்றுவதையும், தமிழர் பண்பாடை மீட்டெடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இதனிடையே, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எனத் தொடங்கும் குறளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் களத்தில் இறங்குவோம் என 2.2.2024 அன்று புதியதாக உதயமாகியுள்ளது, நடிகர் விஜயின் 'தமிழக வெற்றிக் கழகம்'.
இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவைகளி எந்த கட்சிக்கு பெரும்பான்மை பெறும் வாய்ப்புள்ளதாக தனியார் அமைப்பு கள ஆய்வு செய்துள்ளது. இது தொடர்பாக, வெளியான ஆய்வு தகவலில், நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 'திமுக தலைமையிலான கூட்டணிக்கே முதலிடத்தில் வாய்ப்பு' இருப்பதாக தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் 'மக்கள் ஆய்வகம்' என்கிற தனியார் அமைப்பு தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம், மக்கள் ஆய்வகத்தில் முறையான பயிற்சி பெற்ற 18 ஆய்வு நெறியாளர்களும், 85 கள தகவல்கள் சேகரிப்பாளர்களும் மார்ச் 25 முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை தமிழகத்தின் 39 தொகுதிகளில் 4,485 வாக்காளர்களிடம் நேரடி சந்திப்பில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.
இதில் திமுக கூட்டணி 41 சதவீத வாக்குகளும், அதிமுக 24 சதவீதமும், பாஜக 17 மற்றும் நாம் தமிழர் 12.8 சதவீத வாக்குகளையும் பெரும் எனக் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர். அதேபோல, திமுக கூட்டணி அதிகபட்சம் 37 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக கூட்டணி தலா 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதில், முதலமைச்சராக மக்கள் விருப்பம் தெரிவித்த படி, கீழ்க்கண்ட தகவலை அறியமுடிகிறது. அவை பின்வருமாறு:-
வ.எண் | மக்கள் விரும்பும் முதலமைச்சர் | பெரும்பான்மை |
---|---|---|
1. | மு.க.ஸ்டாலின் | 30.7 % |
2. | எடப்பாடி கே.பழனிசாமி | 21.7 % |
3. | சீமான் | 15.5 % |
4. | விஜய் | 14.5 % |
5. | அண்ணாமலை | 11.3 % |
பிரதமர் மோடியின் வருகை நடந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட சிறப்புத் தரவுகளை ஆராயும்போது, வாக்காளர்கள் மீது புள்ளியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை அவர் வருகை ஏற்படுத்தவில்லை என இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் திமுக ஆட்சியமைக்க 31.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அதிமுகவுக்கு 21.5 சதவிகிதம் பேரும், பாஜகவுக்கு 10.1 சதவிகிதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 16.2 சதவிகிதம் பேரும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15.2 சதவீதம் பேரும் ஆதரவு தந்துள்ளதாக இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் உள்ள நடிகர்களில் அதிகமானோர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் நான்காம் இடம் பிடிக்கும் எனவும் திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கட்டிய அணைகள் எத்தனை? - அன்புமணி ராமதாஸ் கேள்வி - Anbumani Ramadoss