சென்னை: அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளாகி இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அதிமுகவில் அடிமட்ட தொண்டராக இருந்து முன்னுக்கு வந்தவர். அவர் கடந்து வந்த பாதையை இப்போது பார்க்கலாம்.
அதிமுகவில் சேர்ந்த ஆர்.வைத்திலிங்கம்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவில் தெலுங்கன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.வைத்திலிங்கம் தஞ்சாவூரில் உள்ள ராஜா சரபோஜி கலைக்கல்லூரியில் 1974-75ஆம் ஆண்டு பியூசி படிப்பில் தேர்ச்சி பெற்றார். இதனைத்தொடர்ந்து சென்னையில் அவர் பிரசிடென்சி கல்லூரியில் சைக்காலஜியில் இளங்கலைப் பட்டப்படிப்பில் 1977ஆம் ஆண்டு சேர்ந்தார். ஆனால் முழுமையாக படிப்பை முடித்து அவர் பட்டம் பெறவில்லை.
சென்னையில் அரசியல் ஈடுபாட்டில் விருப்பம் காரணமாக அதிமுகவில் சேர்ந்தார். பின்னர் ஊருக்குத் திரும்பியவர் உள்ளூரில் தீவிரமாக கட்சி பணியாற்றினார். இதனால், 1985ஆம் ஆண்டு இவருக்கு ஒரத்தநாடு ஒன்றிய துணைச் செயலாளர் பதவி கிடைத்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்பத்துக்கு ஆர்.வைத்திலிங்கம் நெருக்கமாக இருந்தார். சசிகலாவின் சமூகத்தை சேர்ந்தவர். கட்சியில் அடுத்தடுத்து பதவிகள் அவரை தேடி வந்தன. 1995ஆம் ஆண்டு ஒன்றிய செயலாளர் ஆனார். கடந்த 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தேடி வந்த அமைச்சர் பதவி: 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறை அமைச்சர் பதவி தரப்பட்டது. பின்னர் வனத்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011ஆம் ஆண்டு மீண்டும் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அப்போதைய அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி, வேளாண்மை துறை அமைச்சராக பதவி வகித்தார். அந்த சமயத்தில் கட்சியில் நிர்வாகிகள் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இந்த புகார்களை விசாரிப்பதற்காக 2011ஆம் ஆண்டு ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலிதா அமைத்தார். அந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவில் அப்போதைய அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர் இருந்தனர். முனுசாமி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின், அந்த இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.இவர்கள், நால்வர் அணி எனவும் கட்சியினரால் அழைக்கப்பட்டனர். ஜெயலலிதா, சசிகலா ஆகியோரிடம் நேரடி தொடர்பில் இருந்ததால் இந்த நால்வர் அணியினருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற முறையில் ஆர்.வைத்திலிங்கத்துக்கு கூடுதல் செல்வாக்கு இருந்தது.
தேர்தலில் தோற்றபோதும் மாநிலங்களவை எம்பியாக நியமனம்: 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் ஒரத்தநாடு தொகுதியில் ஆர்.வைத்திலிங்கம் போட்டியிட்டார். ஆனால், அப்போது அவர் திமுக வேட்பாளர் ராமசந்திரனிடம் 3645 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விடைந்தார். அப்போது அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதிலும் ஆர்.வைத்திலிங்கம் தோற்றது சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், மாநிலங்களவை உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து சசிகலா ராஜினாமா செய்யக் கூறினார். இதனால் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் தியானம் மேற்கொண்டு தனித்து செயல்பட்டார். இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் முதலமைச்சர் ஆவது தடுக்கப்பட்டது. எனவே, சிறைக்கு செல்லும் முன்பு அடுத்த முதலமைச்சர் தேர்வு சென்னை கூவாத்தூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது ஆர்.வைத்திலிங்கத்தை முதலமைச்சர் ஆக்கலாம் என்று சசிகலா பரிசீலித்ததாகத் தெரிகிறது. ஆனால், அப்போது அவர் எம்எல்ஏவாக இல்லாத சூழலில் அடுத்ததாக எடப்பாடி பழனிசாமியை சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்தார்.
சசிகலாவை நீக்கும் உத்தரவை படித்த சசிகலா ஆதரவாளர்: ஓபிஎஸ் தலைமையிலான அதிருப்தி அதிமுகவினர் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். அப்போது ஆர். வைத்திலிங்கம்தான், “சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார். சசிகலாவின் ஆதரவாளரை வைத்தே சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிக்க செய்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்தார். இதற்கு பதிலடியாக அப்போது டிடிவி தினகரன், ஆர்.வைத்திலிங்கத்தை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அப்போது சிறையில் இருந்த சசிகலாவின் ஒப்புதலின் பேரில் இந்த நீக்கம் செய்யப்பட்டதாக கூறினார்.
டெல்டா மாவட்டத்தில் அதிமுகவை கட்டிக்காக்க வேண்டும் எனில் ஆர்.வைத்திலிங்கம் கட்சியில் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி புரிந்து கொண்டார். எனவே அவரை கட்சியில் வைத்துக் கொண்டார். இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது டெல்டா பகுதியில் தாம் சொல்லும் நபர்களுக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை நிர்பந்தித்து அதில் ஆர்.வைத்திலிங்கம் வெற்றியும் பெற்றார். தஞ்சை மாவட்ட செயலாளர் ஆக இருந்து வந்த ஆர்.வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகித்தார். மீண்டும் 2021ஆம் ஆண்டு ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தம்மை 2016ஆம் ஆண்டு தோற்கடிக்க செய்த ராமசந்திரனை 2021ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடித்தார்.
அதிமுகவில் ஓரம்கட்டப்பட்ட ஆர்.வைத்திலிங்கம்: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும், அதிமுக ஆட்சி அமையாத தற்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் மீண்டும் இணையாததுதான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் வைத்திலிங்கம் துணிச்சலாகச் சொன்னார். ஆனால், அதனை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இதனால் அவரை எடப்பாடி பழனிசாமி ஓரம்கட்டினார். அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் ஆர்.வைத்திலிங்கமும் நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு.. காரணம் என்ன?
இதனையடுத்து அவர் ஓ.பி.எஸ் ஆதரவாளராக ஆர்.வைத்திலிங்கம் செயல்பட்டு வருகிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஆர்.வைத்திலிங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சசிகலா தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது, ஆர்.வைத்திலிங்கம் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது சசிகலா சென்ற காரை பார்த்து நிறுத்தினார். சசிகலா சிறை செல்வதற்கு முன்பு அவரை சந்தித்த ஆர்.வைத்திலிங்கம், அதன் பின்னர் அவரை சந்திக்கவில்லை. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் ரீதியான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு : இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆர்.வைத்திலிங்கம் , அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அறப்போர் இயக்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அண்ட் இன்ப்ராட்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு, உறவினர் பன்னீர்செல்வம், முத்தம்மாள் நிறுவனம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராட்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவனம், பாரத் நிறுவனம் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்கையும் பதிவு செய்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.33 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கின் அடிப்படையில் இப்போது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருவதாக தமிழ்நாடு போலீசார் தெரிவித்துள்ளனர். அரசியல் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த ஆர்.வைத்திலிங்கம் இதனையும் அவர் எதிர்கொள்வார் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்