சென்னை: நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தமது தலைமையில் தனியாக கூட்டணி அமைத்து 19 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன்படி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை ஆகிய 19 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக கணிசமான வாக்குகளை பெற்றாலும் வெற்றிக் கனியை பறிக்க போராடி வருகிறது.
அதிமுகவை விட்டு வெளியேறிய பாஜக, தமிழகத்தின் வடமாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தன் பக்கம் இழுத்துக்கொண்டது. பாமக - பாஜக கூட்டணி குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கே உரித்தான பாணியில் கட்சியை தலைமையேற்று தேர்தல் களத்துக்கு கொண்டு சென்றார். அவருக்கு வலுசேர்க்கும் விதமாக நாடாளுமன்ற தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியது டெல்லி தலைமை.
எம்எல்ஏ முதல் மத்திய அமைச்சர் வரை: அந்த வகையில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், தென்சென்னை தொகுதியில் தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நீலகிரியில் மத்திய அமைச்சர் எல். முருகன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் களமிறங்கினர். கடைசியாக இந்த வரிசையில் அண்ணாமலையும் கோவை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டார்.
அதுபோக கூட்டணி கட்சியில் உள்ளூர் செல்வாக்கோடு இருக்கும் அமமுக டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம், பாமக சௌமியா அன்புமணி, ஐஜேகேவின் பாரிவேந்தர் ஆகியோர் அவரவர் தொகுதிகளில் மினிமம் கேரண்டி வெற்றியை பெற்று தருவார்கள் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், பாஜக ஆதரவில் களமிறங்கிய நான்கு பேரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மாலை 5 மணி நிலவரப்படி, தேனி மக்களவைத் தொகுதி பாஜக ஆதரவு வேட்பாளர் டிடிவி தினகரன் 2,16,918 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்கத் தமிழ் செல்வனிடம் பின்தங்கியுள்ளார். அடுத்தபடியாக ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியிடம் 103723 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்.
அதேபோல, பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி திமுக வேட்பாளர் ஆ.மணியிடம் 20,396 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார். அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் 73363 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார். 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த அதிமுக முக்கிய தொகுதிகளில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படிங்க: ஜூன் 6 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.. தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!