சென்னை: சென்னையில் வசித்து வரும் திருநங்கை ஷாமா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதால், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 1956ன் படி, குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்து, டெல்லியில் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன்.
அதில், குழந்தைகள் தத்தெடுப்பதில் சிறார் நீதி சட்டம், ஆண் - பெண் என இருவர் மட்டுமே குழந்தையைத் தத்தெடுக்க உரிமை உள்ளது. ஆண்களாக இருந்தால் பெண் குழந்தைகளைத் தத்தெடுக்க முடியாது எனவும், பெண்களாக இருந்தால் இருபாலரையும் தத்தெடுக்க உரிமை உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திருமணமானவர்களாக இருந்தால் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும் எனவும், அதன் பிறகு தான் தத்தெடுக்கும் உரிமை உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவரை அங்கீகரித்துள்ள போதும், முழுமையான அங்கீகாரம் சமூகத்தில் கிடைக்கவில்லை.
ஆகையால், திருநங்கையாக இருந்து பெண்ணாகப் பதிவு செய்துள்ள என் விண்ணப்பம், குழந்தையைத் தத்தெடுக்க உரிமை இல்லை என நிராகரிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று (பிப்.27) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "சட்டம் அனுமதிக்காததால் எங்கள் விண்ணப்பம் ஏற்க முடியாது என நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே பலருடைய விண்ணப்பங்கள் மூன்றாம் பாலினத்தவர் என்கின்ற காரணத்திற்காக மட்டுமே நிராகரிக்கப்பட்டு உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தத்தெடுப்பு சட்டத்தின் படி, ஆண், பெண் இருவரைத் தவிர மூன்றாம் பாலினத்தவர் உட்பட 11 பிரிவினருக்குக் குழந்தைகளைத் தத்தெடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், என்ன காரணங்களுக்காக விண்ணப்பங்களை மத்திய அரசு நிராகரித்தது? எனத் தெரிவிக்க, மனுதாரருக்கு அறிவுறுத்தி வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்தனர்.