சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 10 தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களுக்கும் அத்தீர்மானத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 அன்று சென்னையில் முப்பெரும் விழா கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவும், தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள் செய்யவும், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவும், கட்சி கொடிக்கம்பங்களை புதுப்பிக்கவும் வேண்டி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட்ட ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்து மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேசமயம் நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டும் ஒன்றிய பாஜக அரசுக்கு இத்தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் முக்கியமான ஓர் அறிவுறுத்தலை வழங்கினார். அதாவது. கட்சி கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது பதவிப்பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முன்னதாக. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய 'நாடாளுமன்ற தேர்தல்-2024 தென் திசையின் தீர்ப்பு' என்ற நூலை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் பெற்று கொண்டனர்.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் வாங்கி கொடுத்த சுதந்திரத்தை சொந்தம் கொண்டாடும் பாஜக, ஆர்எஸ்எஸ்' - செல்வப்பெருந்தகை சாடல்