சென்னை: சென்னையை அடுத்த சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர், ஜான் செல்வராஜ். திருச்சியைச் சேர்ந்த இவர், மடிப்பாக்கத்தில் தங்கி காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர்ந்து மருத்துவ விடுப்பில் இருந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்த ஜான் செல்வராஜ், திருச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போதும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் சட்ட விரோதமாக எல்லையைக் கடக்க முயன்றதாக கூறி, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள், ஜான் செல்வராஜை கைது செய்து வைத்திருப்பதாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவ விடுப்பில் சென்றிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர், வங்கதேச நாட்டு எல்லையை சட்ட விரோதமாக கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டிருப்பதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இவருக்கு சட்ட விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா, அவர்களுடன் இவர் சென்றாரா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.