சென்னை: நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி காலை முதல் திருச்சி, கோயம்புத்தூர், தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட 6 இடங்களில் புலனாய்வு முகைமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில், லேப்டாப், பென்டிரைவ், தடை செய்யப்பட்ட அமைப்பின் புத்தங்கள் உள்ளட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர், நடத்தப்பட்ட அந்த சோதனையின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், மதிவாணன், விஷ்ணு முருகன் ஆகியோருக்கு நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (பிப்.7) சென்னை, புரசைவாக்கம் பகுதியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், மதிவாணன், முருகன் ஆகிய மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர், நேற்று (பிப்.8) மீண்டும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக்,தென்னகம் விஷ்ணு இருவரையும் என்ஐஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கங்களை அளித்தனர்.
மேலும், சேலம் மாவட்டம், ஓமலூரில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட வழக்கு குறித்தும், இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மூவரிடமும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான 6 பேரிடமும் வெளிநாட்டிலிருந்து ஒரு அமைப்பினர், தொடர்ந்து பேசி வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வெளிநாட்டிலிருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்கும் அந்த நபர் யார்?, அவர் எப்படி இவர்களுக்கு தெரியவந்தது? இவர்களுடன் என்ன மாதிரியான உரையாடல்களை அவர் பேசியுள்ளார்? என பல கோணங்களில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் எம்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களது வீட்டில் நடந்த சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்தி உள்ளனர். இதனிடையே நேற்று முந்தைய தினம், நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டிலிருந்து பேசி நபர் யார் என்று எங்களுக்கு தெரியாது என தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது.
பிப்ரவரி 7ஆம் தேதி சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்றும் (பிப்.8) சுமார் 8 மணி நேரமாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், தென்னகம் விஷ்ணு ஆகியவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இந்த விசாரணையில் கிடைக்கும் தகவலை அடுத்துதான், அடுத்தகட்ட நடவடிக்கைகளை என்ஐஏ மேற்கொள்ளும் எனவும் என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.