சென்னை: நடைபெற்று முடிந்த 18-ஆவது மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 இடங்களையும் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கிய திமுக பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி அதற்கு போனஸாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என தொடர் வெற்றிக் களிப்பில் உள்ளது.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழு: நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என தேர்தல் வாசம் இன்னும் நீங்காத சூழலில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான, திமுக முதன்மை செயலாளர், கே.என்.நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என 5 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 20 ஆம் தேதி வெளியிட்டார். இந்த குழு வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திமுகவில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை தலைமைக்கு பரிந்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகார மையமாகும் குறிஞ்சி?: தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிலையில், இரண்டாவதாக நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய பொறுப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில் தடபுடல் விருந்து அளிக்கப்பட்டு, பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட விருந்தில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஆகிறாரா என கேள்வி எழுந்துள்ள நிலையில், அவ்வப்போது கட்சியின் அமைப்பு ரீதியான சந்திப்புகளும் அரசு ரீதியான சந்திப்புகளும் அமைச்சர் உதயநிதியின் இல்லத்திலேயே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ள திட்டம்?: நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பின்னர், இன்னும் பணி முடியவில்லை 2026 சட்டமன்றத் தேர்தல் நம் இலக்கு என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பேசி வரும் நிலையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு விருந்தும் அளிக்கப்பட்டு விட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 95 சதவிகித நிர்வாகிகள் சிறப்பான பணியை மேற்கொண்டனர் என்றும் மீதமுள்ள 5% பெரும் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்" எனப் பேசியதாக தெரிகிறது.
மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் மிக மிக முக்கியமானது அதற்காகத்தான் இந்த ஒருங்கிணைப்புக் குழுவை தலைவர் அறிவித்துள்ளார். அந்த ஒருங்கிணைப்பு குழுவின் முதல் நிகழ்ச்சியே தேர்தல் தொகுதி பார்வையாளர்கள் உடனான இந்த கலந்துரையாடல் தான் என்றால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அந்த அளவிற்கு முக்கியம் என எடுத்துரைத்தார்.
தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்க திட்டம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை திமுக தலைமை அறிவித்திருந்தது. அந்த பொறுப்பாளர்கள் தொடர்ச்சியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பணிகளை ஒருங்கிணைத்து வெற்றிக்கான வியூகங்களை வகுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதில் வெற்றியும் பெற்றிருந்தது.
இந்த சூழ்நிலையில் தான் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக விரைவில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பின்னர் சட்டமன்றத் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க திமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் தற்போது தொகுதி பொறுப்பாளர்களாக பணியாற்றிய 90% பேருக்கு மீண்டும் தொகுதி பொறுப்பாளர் பணி வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்? உண்மை நிலவரம் என்ன?