சென்னை: தேசிய தேர்வு முகமை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வினை மே 5ந் தேதி 571 நகரங்களில் 4750 மையங்களில் 13 மாநில மாெழிகளில் நடத்தியது. இந்தத் தேர்வினை 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்கள் எழுதினர். அவர்களில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தகுதிப்பெற்றனர். நீட் தேர்வினை எழுதிய தமிழக மாணவர்கள் 8 பேர் உட்பட 67 பேர் 720க்கு 720 பெற்றுள்ளனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும், நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் கேள்விக்கான விடைக்குறிப்புகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் மே 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் மீது மாணவர்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஜூன் 1-ஆம் தேதி வரையில் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. விடைக்குறிப்புகளை வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து அவர்கள் வழங்கும் விடைக்குறிப்பு இறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் சந்தேகம்: இதற்கிடையே, நீட் தேர்வின் முடிவில் 720க்கு 720 மதிப்பெண்களை 67 மாணவர்கள் எப்படி பெற முடியும் என்ற சந்தேகத்தை எழுப்பினர். இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வு என்பது குழப்பமான ஒன்று, தேவையற்ற ஒன்று, நம்பிக்கை இல்லாத ஒன்றாக உள்ளதால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து வருகிறது.
67 பேர் 720க்கு 720 எவ்வாறு சாத்தியம்: இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வில் 720க்கு 720 என்ற மதிப்பெண் பெற்றவர்கள் 67 பேர், இதுதான் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஒருவர் மட்டுமே முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 2021 ஆம் ஆண்டு 3 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். 2022 ஆம் ஆண்டு ஒருவர், 2023 ஆம் ஆண்டு விழுப்புரம் பகுதியை சேர்ந்த மாணவர் உள்ளிட்ட 2 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அதனால் தான் தற்போது நீட் தேர்வின் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பரிதாபாத் எனும் இடத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 7 பேர் 720க்கு 720 என்ற முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கான மொத்த வினாக்கள் 180. ஒவ்வொரு சரியான வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும், தவறான பதில்களுக்கு 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இதன்படி மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளியாகி உள்ள தேர்வு பட்டியலில் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தால் 716 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும். தவறாக பதில் அளித்து இருந்தால் 715 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இதனால் பெரிய அளவிலான முறைகேடுகள் நடத்துள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் வழங்குவதாக தெரிவிக்கின்றனர். கருணை மதிப்பெண்கள் வழங்கும் முறை எப்போது தொடங்கப்பட்டது. யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என்று கேள்விக்கு எந்த விளக்கமும் சொல்லாமல் உச்சநீதிமன்றத்தில் ஆணையின்படி கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக கூறுகின்றனர். திடீர் என்று உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்று கூறுவதும் இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வு எழுதிய 23,33,297 பேரில் எத்தனை நபர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறாமல் இருப்பது நியாயமில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அரசின் விளக்கம்: வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உட்பட, 571 இடங்களில் 4750 மையங்களில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ)நீட் (இளநிலை) -2024 தேர்வை 2024 மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் (எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்றவை) சேருவதற்கான ஒரே மாதிரியான நுழைவு மற்றும் தகுதித் தேர்வாக, தேசிய தேர்வு முகமை, 2019 மே முதல் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பாக நீட் (யுஜி) தேர்வை நடத்தி வருகிறது.
நீட் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு எழுப்பப்படும் கவலைகள்: தேர்வு முடிவுகளை என்.டி.ஏ ஜூன் 4-ஆம் தேதி அறிவித்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, எதிர்பாராத விதமாக அதிக கட்-ஆஃப் மதிப்பெண்கள், ஈடுசெய்யும் மதிப்பெண்கள் மற்றும் சரியான மதிப்பெண்களை (720/720) பெறும் தேர்வர்களின் எண்ணிக்கை குறித்து கவலைகள் எழுந்துள்ளன. ஒரு மையத்தில் எட்டு முதலிடம் பெற்றவர்கள் (ஆறு சரியான மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் 718 மற்றும் 719 மதிப்பெண்களுடன் தலா ஒருவர்) இருப்பது குறித்தும் கவலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மத்திய அரசு நீட் தேர்வுக்குறித்து வெளியிட்டுள்ள விளக்கத்தில், தேசிய தேர்வு முகமை ஜூன் 4-ஆம் தேதிக்குள் முடிவுகள் தயாராக இருந்ததால், அறிவிப்பை மேலும் பத்து நாட்கள் தாமதப்படுத்த எந்த காரணமும் இல்லை என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் அறிவிக்கும் நேரத்தை ஆண்டுதோறும் மேம்படுத்த தேசிய தேர்வு முகமை செயல்பட்டு வருகிறது. கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, அவை தேர்வர்களின் ஒப்பீட்டு செயல்திறனைப் பொறுத்து மாறுபடும்.
720க்கு 720 மதிப்பெண் பெற்றவர்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு 67 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இருப்பினும், இந்த 67 இல் 44 பேர் இயற்பியல் விடைக்குறிப்பை திருத்தியதாகக் கூறப்படுகிறது, அதற்காக இப்போது இரண்டு பதில்களும் சரியானவை என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
நேர இழப்புக்கான கருணை மதிப்பெண்கள்: நீட் 2024 தேர்வர்கள் பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்ததாக என்டிஏ தெரிவித்துள்ளது. இது 5.5.2024 அன்று சில தேர்வு மையங்களில் தேர்வு நடத்தும் போது நேரமிழப்பு ஏற்பட்டதாக மாணவர்கள் மத்தியில் கவலை எழுந்தது. இந்த மையங்களில் தேர்வை முடிக்க தங்களுக்கு முழு 3 மணி நேரம் 20 நிமிடங்கள் கிடைக்கவில்லை. வினாத்தாள்கள் தவறாக விநியோகிக்கப்பட்டது, சில சந்தர்ப்பங்களில் ஓஎம்ஆர் கிழிந்தது போன்ற காரணங்கள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்திருந்தனர்.
எனவே, இதுபோன்ற குறைகள், பிரதிநிதித்துவங்களை ஆராய்ந்து அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்க தேர்வு மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட குறை தீர்க்கும் குழு (ஜி.ஆர்.சி) தேசிய தேர்வு முகமையால் அமைக்கப்பட்டது. ஜி.ஆர்.சி.யின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாணவர்களின் மதிப்பெண்கள் தீர்மானிக்கப்படும் என்று என்.டி.ஏ நீதிமன்றங்களில் பதிலைச் சமர்ப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் 13.6.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படி சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறைகளை குழு பரிசீலித்தது. தேர்வு நேர இழப்பு கண்டறியப்பட்டு, அத்தகைய தேர்வர்களுக்கு அவர்களின் பதிலளிக்கும் திறன் மற்றும் இழந்த நேரத்தின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
இழப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவதால் எழுந்த சிக்கல்களுக்கு தீர்வு காண, அதை ஆராய ஒரு குழுவை அமைக்க தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எழும் குரல்: இந்நிலையில், நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சயாகி உள்ள நிலையில், நீட் தேர்வை ரத்துச் செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் இருந்து குரல் எழும்பி உள்ளது. அதே சமயம்,மாணவர்களுக்கு வழங்கப்படும் வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் மாற்றம் இருந்தால், தேசிய தேர்வு முகமை நீட் தேர்விற்கான இறுதி விடைகளை வெளியிட்டப் பின்னர் மாணவர்கள் மாற்றம் வேண்டி விண்ணப்பம் செய்திருக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் வைக்கப்படுகின்றன.
மேலும், தேசிய தேர்வு முகமை 2024ம் ஆண்டு நீட் தேர்வினை எழுதிய மாணவர்களில் காலதாமதம் ஏற்பட்ட மாணவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 5 மதிப்பெண்களும், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் பழையப் பாடத்திட்டதில் படித்து, புதியதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்த வினாவிற்கும் மாறுபாடு இருந்ததால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக மூத்த கல்வியாளர் ஒருவர் தெரிவித்தார்.