சென்னை: கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் 10 பேருக்கு வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile virus Fever) காய்ச்சல் பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் காய்ச்சல் பரவல் உள்ளதா மற்றும் இந்த தொற்றுக்கான அறிகுறிகள் என்ன என்பது குறித்து பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியது:
வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile virus) என்பது கியூலக்ஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுவதாகும். இந்த வைரஸ் பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது. ஆனால் இது ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு நேரிடையாக பரவுவதில்லை இந்த வைரஸ் உகண்டா நாட்டில் வெஸ்ட் நைல் மாவட்டத்தில் 1937 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
நோய் அறிகுறிகள்: வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80 சதவிகித பேருக்கு அதற்கான அறிகுறிகள் காணப்படுவதில்லை. காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும். ஒரு சிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம். உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம், பக்கவாதம் மற்றும் மூளை காய்ச்சல் (Encephalitis) ஏற்படும்.
இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கும் எனினும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களை எளிதாக தொற்றிக் கொள்ளும். இத்தொற்று நோய் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, மேற்கு ஆசியா பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
வெஸ்ட் நைல் வைரஸ் நோய் அறிகுறிகள் இருப்பின் குறிப்பாக மூளை காய்ச்சல் (Encephalitis) போன்ற பாதிப்புகள் உடையவர்களை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். எலைசா - (Elisa) மற்றும் ஆர்டி பிசிஆர் (RTPCR) பரிசோதனைகள் மூலம் இதனை கண்டறியலாம். நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு, அவற்றை புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் (NIV-PUNE) பரிசோதனை செய்ய வசதி உள்ளது. இந்த காய்ச்சல் பரவினால் பொதுமக்கள் பீதியடைய வேண்டியதில்லை.
தற்காத்து கொள்வது எப்படி?: காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சலால் ஏற்படும் நீரிழப்பினை தவிர்த்திட போதியளவு நீர் மற்றும் திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வீடுகளை சுற்றி சுத்தமாகவும், நீர் தேங்காமலும் பார்த்து கொள்ள வேண்டும். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்று இதற்கு தடுப்பு ஊசிகள் இல்லை. எனவே உடனடி சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும்.
கொசுவலை, கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும் சுயமாக சிகிச்சை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கூடுதல் தகவலுக்கு எண் 104 ஐ தொடர்பு கொள்ளலாம் . தமிழ்நாட்டில் இதுவரையில் யாருக்கும் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.