சென்னை: மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் தமிழக பாஜக சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் தனித்து ஒரு கூட்டணியை அமைக்க முடியும். ஒரு வித்தியாசமான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பதற்கு பிள்ளையார்சுழி போட்ட தேர்தல் 2024 மக்களவை தேர்தல்தான்.
மூன்றாவது முறையாக ஒரு நாட்டில் ஆட்சியை தக்க வைப்பது எவ்வளவு கடினம் என அனைவருக்கும் தெரியும். நேற்று கூட இங்கிலாந்தில் ஆளும் கட்சி ஆட்சியை இழந்திருக்கிறது. ஆனால், நமது பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்திருக்கிறார். கரோனாவிற்கு பிறகு அனைத்து நாடுகளிலும் ஆட்சி மாறிய நிலையில், பாஜக மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.
இன்றைய தினம் காலை, @BJP4Tamilnadu மாநிலச் செயற்குழு கூட்டம், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @ChouhanShivraj அவர்களும், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு… pic.twitter.com/CKV78yGhOs
— K.Annamalai (@annamalai_k) July 6, 2024
2024 தேர்தலில் தமிழக பாஜகவின் வாக்கு 11 சதவீதம் உயர்ந்துள்ளது. பாஜக கூட்டணி மட்டும் 18 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அடுத்து வரக்கூடிய 2 ஆண்டுகள் கடினமான காலம். பாஜகவின் தொண்டர்களுக்கு எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத அடக்குமுறை தமிழகத்தில் இருக்கிறது.
தினமும் பாஜக தொண்டர்கள் மீது தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தின் அரசியல் களம் மாறிக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியை ஒரு வரியில் குறிப்பிட வேண்டும் என்றால், தேளிடம் கொட்டு வாங்கி தண்ணீர் குடித்த குரங்கு ஒன்று தெருவுக்கு வந்த கதைதான்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை சாதாரணமாகிவிட்டது. ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை நேற்று மாலை சாலையில் சாதாரணமாக வெட்டிக் கொன்றுள்ளனர். மறுபுறம், கள்ளச்சாராய மரணங்கள் சகஜமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு மரக்காணம் அருகே 22 பேர் கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்தனர்.
தற்போது கள்ளக்குறிச்சியில் 62 பேர் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்துள்ளனர். எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. சாமானிய மனிதன் அரசை எதிர்த்து கேள்வி கேட்டால், அவர்களுக்கு கிடைக்கும் பரிசு கைதாக இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகள் சாமானிய மனிதனின் குரலாக இருந்து தீயசக்தி திமுகவை ஆட்சியில் தூக்கி எறிய வேண்டும்.
தமிழகத்தில் தற்போது ஆட்சியை யார் நடத்துகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. முதலமைச்சரால் சுயமாக பேச முடிகிறதா? முடிவெடுக்கக் கூடிய திறன் இருக்கிறதா? என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால், திமுக அதற்கு பதிலளிக்க தயாராக இல்லை.
அதேநேரம், திமுகவின் அமைச்சர்கள் முதலமைச்சரின் மருமகன் தலைமையிலான ஒரு குழுவை கோப்புகளுடன் சென்று சந்திக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத அவர்கள், அந்த கோப்புகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்கின்றனர்.
அதனால்தான் நமது முதலமைச்சர் ஒரு பொம்மை என விமர்சிக்கிறோம். தமிழகத்தின் கொலை, கொள்ளைகள் குறித்து காவல்துறையைக் கேட்கும் திறன் முதலமைச்சருக்கு இல்லை" என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இதைத்தொடர்ந்து, பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் : தமிழகத்தை அச்சுறுத்தும் கள்ளச்சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை தேவை என்ற தீர்மானத்தை சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்தை முன்னாள் எம்எல்ஏ சம்பத் வழிமொழிந்தார்.
முல்லைப் பெரியாற்றில் அணை கட்டும் கேரளா, காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்தைக் கண்டித்தும், நதிநீர் உரிமையை மீட்டெடுக்கவும் 3வது தீர்மானத்தை முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் முன்மொழிய, அதை ஜி.கே.நாகராஜ் வழிமொழிந்தார்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கக் கோரி கொண்டுவரப்பட்ட நான்காவது தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா முன்மொழிய, அந்தத் தீர்மானத்தை சரத்குமார் வழிமொழிந்தார். போதைப்பொருள் கடத்தலில் காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக்கோரும் 5வது தீர்மானத்தை முன்னாள் எம்பி வி.பி.துரைசாமி முன்மொழிய, அதை அர்ஜுன மூர்த்தி வழிமொழிந்தார்.
நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவ எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கண்டித்து கொண்டுவரப்பட்ட 6வது தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்மொழிய, அதை விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி வழிமொழிந்தார்.
இறுதியாக பள்ளிகளில் மத அடையாளங்களை அழிக்க முற்படும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தீர்மானத்தை முன்மொழிய, அதை முன்னாள் மேயர் கார்த்தியாயினி வழிமொழிந்தார்.
இதையும் படிங்க: ஆட்டோ டிரைவர் போட்ட ஸ்கெட்ச்.. கச்சிதமா நடந்த படுகொலை.. ஆம்ஸ்ட்ராங் மரணத்தின் பகீர் பின்னணி! - armstrong murder reason