சென்னை: மன்னர்கள் காலங்கள் தொடங்கி இன்று வரை வேட்டைக்காகவும், சுய பாதுகாப்பிற்காகவும், மனிதர்கள் தங்கள் வீடுகளில் நாய்களை வளர்க்கின்றனர். காலப்போக்கில் நாட்டு நாய்கள் மீதான மோகம் குறைந்து, வெளிநாட்டு நாய்களை வைத்திருப்பதே சிறப்பு அந்தஸ்து என்ற போலி கௌரவத்திற்காக நாய் பிரியர்களால் அதிக அளவில் வெளிநாட்டு நாய்கள் வளர்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக, இந்திய தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்காத நாய்களை வளர்க்கத் தொடங்கியதன் காரணமாக, நாட்டு நாய்கள் தெருநாய்களாக மாறி அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாகவும், இந்தியாவில் இன்றைய நிலவரப்படி சுமார் 6 கோடி தெருநாய்கள் இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: இந்தியாவில் வெறிநாய் கடி மூலமாக வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2015 முதல் 2021 வரை சுமார் 4.1 கோடி நாய்க்கடிக்கு மருந்து விற்பனை செய்ததன் மூலம் ரூ.8 ஆயிரத்து 20 கோடி வருமானத்தை மருந்து நிறுவனங்கள் ஈட்டியுள்ளது.
நாய்க்கடி மற்றும் ரேபிஸ் நோய் பாதிப்பு (Rabies) உயிரிழப்புகளைத் தடுக்க கடந்த 29 ஆண்டுகளாக சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக விலங்குகள் நல வாரியம் செலவிட்டுள்ளது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் டன் கழிவுகளை நாய்கள் மட்டும் வெளியேற்றுகின்றன என்ற அபாயகரமான தகவலும் வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைப்படுத்தி, பரிசோதித்த பிறகுதான் வளர்க்க அனுமதி வழங்கப்படுவதால், உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறும் காரணத்தில் உண்மையில்லை.
இந்திய நாய்களை இனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம், வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்தால்தான், உள்நாட்டு நாய் இனங்களைக் காக்க முடியும் என்பதில்லை. மேலும், வர்த்தக ரீதியில் நாய்கள் இறக்குமதி செய்வதை முறைப்படுத்தலாம் எனக் கூறி, வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு விதித்த தடையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
விலங்குகள் நல ஆர்வலர்: நாய்கடி விவகாரம் குறித்துப் பேசிய விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன், "நாய்கள் இறக்குமதி செய்வதை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். அபாயகரமான நாய்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதனால், உரியப் பாதுகாப்பு இல்லாமல் வெளியே கொண்டு செல்ல நாய் உரிமையாளர்கள் தயங்குவார்கள்.
நகராட்சி சட்டம் 1998-ன் படி மனிதர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம். தெருநாய்களை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். நாய்களுக்கு உரிமம் கட்டாயம் என அறிவித்தால் மனித மோதல்களைத் தடுக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
சட்ட வல்லுநர்: நாய்க்கடி விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடைமுறைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சொக்கலிங்கம் கூறுகையில், "அபாயகரமான நாய்களால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், தடுக்க எந்த சட்டமும் இல்லை. உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமில்லை என்பதால், இழப்பீடு மட்டுமே பெறலாம்.
மிருகங்களைத் தாக்கும் மனிதர்கள் மீது ஐபிசி பிரிவின் படி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அபாயகரமான நாய்களை வளர்த்து அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதன் உரிமையாளருக்குத் தண்டனை விதிக்க எந்த சட்டமும் இல்லை.தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, கருத்தடை செய்யலாம். மேலும், தெருநாய்களின் இனப்பெருக்கத்திற்கு காரணமான குப்பைத் தொட்டிகளை அப்புறப்படுத்தலாம் சட்டங்கள் சரியாக அமல்படுத்தாமல் மனித - மிருக மோதல்களைத் தடுக்க முடியாது" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய் சிறுவனை கடித்து காயம் ஏற்படுத்திய விவகாரத்தில், நாயின் உரிமையாளர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்நிலைய ஜாமினில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “எனக்கும் சுடும்ல..” ஷூ அணிந்து துப்பு துலங்கிய மோப்பநாய்!