சென்னை : வெயில் காலம் முடிந்த பின்னரும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் மதுரையில் 100 பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியுள்ளது. இதில், நேற்று நுங்கம்பாக்கத்தில் 100.7 பாரன்ஹீட் வெயில் பதிவானதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வெப்பநிலை அதிகரிப்பது குறித்து வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரேத்யகமாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான். கடந்த ஓரிரு வாரங்களாக இயல்பை விட 2 - 3 டிகிரி கூடுதலாக வெயில் பதிவாகி இருப்பதற்கு மழைப்பொழிவு இல்லாததே காரணமாக உள்ளது.
குறிப்பாக தென்னிந்தியா பகுதி முழுவதுமே வறண்ட வானிலையே காணப்படுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. மே, ஜூன் மாதங்களில் இதே போன்ற வெப்பநிலை உணரப்பட்டால் 41 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி இருக்கும்.
இதையும் படிங்க : "எதிர்க்கட்சிகள் எதிரி கட்சியாக இருக்கக் கூடாது" - தமிமுன் அன்சாரி சாடல்! - Thamimum Ansari
ஆனால் தற்போது 38 லிருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருந்தாலும் வெப்பம் சற்று கூடுதலாக உணரப்படுகிறது. மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சென்னையில் இரண்டு இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. தற்போது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது.
வெயில் அதிகம் பதிவாகும் மே, ஜூன் மாதங்களை விட தற்போது காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் குறைத்த வெப்பம் பதிவானலே கூடுதலாக வெயில் காலங்களை போல் வெப்பம் உணரப்படுகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் பின் வெப்பத்தின் தாக்கம் குறையக்கூடும்.
ஏனென்றால் வெப்ப சலனம் காரணமாக உட்புற பகுதிகளில் மழை பெய்யும் சூழல் தற்போது இருப்பதால் படிப்படியாக வெப்பநிலை குறைய வாய்ப்பு இருக்கிறது. முழுமையாக வெப்பத்தின் தாக்கம் குறைய வேண்டும் என்றால் மேற்கில் வீசக்கூடிய காற்று கிழக்கு நோக்கி வீசும் போது வெப்பத்தின் தாக்கம் குறைய குறையும்.
வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை வரும்போது காற்றின் வேகம் மேற்கிலிருந்து மாறும் அந்த சமயங்களில் வெப்பநிலை குறையும். அக்டோபர் 2 அல்லது 3வது வாரங்களில் வடகிழக்கு பருவமழை உருவாகும். அக்டோபர் மாதம் 2வது வாரம் வரை 34 - 35 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருக்கும் என்பதால் எனவே பொது மக்கள் வெயிலில் வருவதை தவிர்க்க வேண்டும்" என தெரிவித்தார்.