திருவாரூர்: கொலை வழக்கு தொடர்பாக இன்று (பிப். 7) திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்த 4 பேரின் காரில் ஆயுதங்கள் இருந்ததை கண்ட போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் வந்தது கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்டத் துணைத் தலைவர் சதா சதிஷின் கார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல்வேறு வழக்குகள் தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வரும் மக்கள் மற்றும் அவர்களது வாகனங்களை கண்காணித்து பரிசோதிப்பதற்காக தினந்தோறும் நீதிமன்ற வாயிலில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நீடாமங்கலம் கடை தெருவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வனின் கொலை வழக்கு சம்பந்தமாக சேனாபதி மற்றும் தினேஷ் ஆகிய இருவர் இன்று (பிப். 7) திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கொலை வழக்கில் ஆஜராவதற்காக வந்த சேனாபதி மற்றும் தினேஷ் ஆகிய இருவரின் காரையும் பரிசோதித்துள்ளனர். அப்போது போலீசார் காரின் டிக்கியை திறந்து பார்க்கையில், அதில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து காரை பறிமுதல் செய்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர் காரில் பயணித்த கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த சேனாபதி, தினேஷ், பாரதிச்செல்வன் மற்றும் டிரைவர் விக்டர் தேவராஜ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்த அந்த கார் கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்டத் துணைத் தலைவர் சதா சதிஷின் கார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற வளாகத்திற்குள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை எடுத்து வந்த 4 பேர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாவட்டத் துணைத் தலைவர் காரில் அரிவாள் இருந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.