பெரம்பலூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த வகையில், குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், பெரம்பலூர் என ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெரம்பலூரில் உள்ள துறையூர் - புறவழிச்சாலையில் இருக்கும் ஆதவ் பப்ளிக் பள்ளியில் வைக்கப்பட்டு உள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் ஆகியவை சரி பார்க்கப்பட்டு, தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான கற்பகம் ஆகியோர், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அறையை பூட்டி சீல் வைத்தனர். மேலும், வாக்கு எண்ணும் மையம் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், துணை ராணுவத்தினர், காவல் துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.