சென்னை: சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன், “இந்தியாவின் 145 கோடி மக்கள் தொகையில் 10 சதவீதம் மக்கள் மட்டுமே பட்டதாரிகள். இதற்குப் பின்னால் இருக்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் எனது பாராட்டுக்கள். உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 27 சதவீதம் மட்டுமே.
அது 50 சதவிதம் ஆக உயர வேண்டும். மேலும், கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றம் பெறும்போது, அதற்கு ஆதரவாக நான் ஓட்டு அளித்தேன். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை செலவழிக்கின்றன. ஆனால், இந்தியா 3 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறது.
அது சென்ற ஆண்டில் 2.8 சதவீதம் இருந்தது. நடப்பு ஆண்டில் 2.7 சதவீதமாக உள்ளது. இதனால் நடுத்தர மற்றும் எழை மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை. கல்விக் கூடங்களில் கட்டுமானங்களுக்கு அரசு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி முதல் 28 சதவீதம் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு விதிக்கிறது.
இதற்கான வரியை அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும், VIT-இன் ஏறத்தாழ 70,000 மாணவர்களில் 730 மாணவர்கள் மட்டுமே அரசு உதவித் தொகையை பெற்றுள்ளனர். பெண்களுக்கு பணி வாய்ப்பு அதிகம் வழங்கப்பட வேண்டும். நாட்டின் உண்மையான சுதந்திரம், கல்வி வாயிலாக மட்டுமே கிடைக்கும். வளர்ந்த நாடுகளில் தனி நபர் வருமானம் 13,000 டாலர்களாக உள்ளது. ஆனால் இந்தியாவில் அது 2,700 டாலர்களாக மட்டும் தான் உள்ளது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது என்ன? - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி