விருதுநகர்: தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விருதுநகர் பகுதியில் இன்று விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, பக்ரீத் பண்டிகையான இன்று விருதுநகர் பெரிய பள்ளிவாசல் பகுதியில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு அங்கிருந்த இஸ்லாமிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விருதுநகர் தொகுதியில் 1000 இடங்களில், மூன்று மாதங்களில் நன்றி தெரிவிக்க இருக்கிறேன்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது குறித்த கேள்விக்கு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு முதலாளிகள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். முதலாளிகள் அளித்த கட்டளையை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் உங்களது முதல் குரல் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, சிவகாசி பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை மீட்டெடுக்க முயற்சிப்பேன். ஜிஎஸ்டி ஆல் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகளின் குரலாகவும், ஜிஎஸ்டி வரியைக் குறைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை சாதிய தலைவராக மாற்றி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, சாதி மற்றும் மத அரசியலை செய்வது ஆர்எஸ்எஸ் டிஎன்ஏ-வில் உள்ளது. ஆர்எஸ்எஸ் வழியில் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி எங்களுக்குப் பாடம் எடுக்கக் கூடாது. சாதி மற்றும் மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை. சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள்.
தமிழக மக்கள் மனதில் பாஜக காலூன்றி உள்ளதாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ள தொடர்பான கேள்விக்கு, ரவுடிகள் உதவியோடு அரசியல் செய்கின்றனர். ரவுடிசம், 420 உள்ளிட்ட குற்ற வழக்கு உடைய நபர்களை பாஜகவில் இணைத்துள்ளனர்.
பாஜக என்பது ரவுடிகளின் கட்சியாக மாறி உள்ளது என அவர்களது கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அண்ணாமலை பாஜகவின் தலைவராக வந்த பின்னர், பாஜக ரவுடிசம் மிகுந்த கட்சியாக மாறி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கும், முன்னாள் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது தொடர்பான கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி ஜனநாயக கட்சி. கருத்து மோதல் என்பது காங்கிரஸ் கட்சியில் ஜனநாயக பூர்வமாக நடைபெற்று வருகிறது. செல்வப்பெருந்தகை கருத்தும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களது கருத்தும் ஒரே கருத்து தான். கருத்து சொல்லுகின்ற விதம் மாறி உள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் ஆரம்பத்தில் அதிகம் குரல் கொடுத்த காங்கிரஸ் தற்போது ஒன்றும் பேசாமல் இருந்து வருகிறது என்ற கேள்விக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கோரிக்கை என்பது நியாயமான, நேர்மையான விசாரணை தேவை என்று கூறியுள்ளோம்.
தமிழக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டிருக்கிறது. எங்களுடைய திறமையான அதிகாரிகள் குற்றவாளிகளைக் கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கயிற்றில் சிக்கி காயம் அடைந்த புலி.. சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதியில் விடுவிப்பு! - COIMBATORE TIGER TREATMENT