சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காடு மாதிரிவேடு பகுதியில் உள்ள மேட்டுத்தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முத்துமீனா. அதே தெருவில் முத்துமீனாவின் பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முனுசாமி. இவர்கள் இரு வீட்டுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முத்துமீனா வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர்களை முனுசாமி தரப்பினர் திட்டியதாகக் கூறப்படுகிறது.
அதுதொடர்பாக, முத்துமீனாவும் முனுசாமி தரப்பினரிடம் கேட்டுள்ளார். அதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல், வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்த பிரச்சனை, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அதில் இரு குடும்பத்தினரும் மாறி மாறி செங்கல் போன்றவற்றால் தாக்கி கொண்டுள்ளனர்.
அந்த தாக்குதலில் முத்துமீனா, உறவினர் பையன் மற்றும் முனுசாமி ஆகியோருக்கு தலை மற்றும் வாய் பகுதியில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, காயமடைந்த முத்துமீனா, உறவினர் பையன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
தற்போது, ஆண் பெண் என வித்தியாசம் இல்லாமல் மாற்றி மாற்றி தலை முடியைப் பிடித்து சண்டையிட்ட காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதர்கிடையே இரு தரப்பினரும் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நாட்டை விட்டு வெளியேற அமெரிக்கா தான் காரணமென ஹேக் ஹசீனா குற்றச்சாட்டு?