திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 60 வயதான மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன், ஒவ்வொரு பண்டிகை காலங்களுக்கும் ஏற்றாற்போல் களிமண்ணில் பல்வேறு வேலைப்பாடுகளை செய்து வருகிறார்.
இவர் 40 வருடங்களுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது களிமண்ணில் நாவல் மரம் மற்றும் நெல்லிக்காய் மரத்தின் விதைகளை வைத்து களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய வேல்முருகன் “ இந்த சிலைகள் 100 ரூபாயிலிருந்து ஆரம்பித்து ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இந்த இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை விநாயர்கள் சிலைகளின் விற்பனை அமோகமாக இருக்கிறது.
இந்த முறையில் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுப்புற சூழலில் எந்தவித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. இந்த சிலைகளுக்குள் நாவல் மற்றும் நெல்லிக்காய் விதைகளை வைத்து தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த சிலைகளை கரைக்கும்போது அந்த விதைகள் ஆற்றங்கரை ஓரங்களில் விழுந்து முளைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
தமிழக அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி இந்த களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் மாவட்டம் முழுவதும் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 3 மாதங்களாக இந்த விதை விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
இதுவரை சுமார் 1,000 சிலைகளை தயாரித்துள்ளேன். இயற்றை சூழலுக்கு ஏற்ற சிலை என்பதால் திருநெல்வேலி மட்டுமல்லாமல் ராதாபுரம். வள்ளியூர், அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளிலிருந்தும் சிலை வாங்க வருகிறார்கள்.
நவீன காலத்தில் நாட்டில் புவி வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது. அதை தடுப்பதற்கு மரங்களை உருவாக்கும் வகையில் விதை விநாயகர் செய்ய திட்டமிட்டேன். இதன்படி சிலைகளுக்கு அடியில் நாவல், நெல்லி, வேம்பு போன்ற விதைகளை வைக்கிறேன்.
மக்கள் இந்த சிலைகளை வீட்டுத் தோட்டத்தில் கரைத்தால் நிச்சயம் ஒரு மரம் வளரும். இதன் மூலம் புவி வெப்பமயமாதல் குறையும். நெல்லையில் அரசு உயர் அதிகாரி ஒருவர் தனது உதவியாளரை அனுப்பி சிலை வாங்க வந்தார். அப்போது சிலையில் விதை இருப்பதை அறிந்து ஒன்றுக்கு மூன்று சிலைகளை வாங்கி சென்றார்” என்று பெருமிதத்துடன் கூறினார் மண்பாண்ட கலைஞர் வேல்முருகன்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விநாயகர் சிலையில் உருவான கோட் விஜய்.. ஓவிய ஆசிரியர் செல்வம் அசத்தல்!