சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகள் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளில் முனைப்புக் காட்டி வருகிறது.
அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையிலான பேச்சுவார்த்தை திமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,"விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு கூடி அறிவிப்பு செய்யும். இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் என்ன பகிர்வு முறை கையாளப்பட்டதோ அதைப் பகிர்வு முறையிலேயே 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு கடந்த தேர்தல்களில் இந்த கூட்டணி எவ்வளவு கட்டுக்கோப்பாக இருந்ததோ, அதேபோல் இந்த தேர்தலிலும் கட்டுக்கோப்பாக இயங்கி ஒட்டுமொத்த வெற்றியையும் பெற வேண்டும் என்கிற அடிப்படையில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்" தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை வந்தடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள்!