ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது, இதன் காரணமாக நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு நீர் வழித்தடங்கள் மற்றும் விவசாய நிலங்களின் வழியாக அதிக அளவு நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், வெள்ளப்பெருக்கு காரணமாக நம்பியூர் பழனிகவுண்டன் புதூர் - கெடாரை செல்லும் வழியில் உள்ள தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீர் சென்று வருகிறது. இந்த தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்று போது வெள்ள நீர் அதிகளவு சென்றதால் இரு சக்கர வாகனத்துடன் அந்த நபர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்.
இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த கிராம மக்கள், அவரை கயிறு கட்டி அதன் மூலமாக மீட்டனர். தொடர்ந்து கனமழை காரணமாக நம்பியூர், பருத்திக்காட்டுப்பாளையம் பகுதியில் நீர்வழி தடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த தடுப்புச் சுவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில், ஆபத்தை உணராமல் வெள்ள நீர் மூழ்கடித்துச் செல்லும் தரைமட்ட பாலத்தின் சாலையை கடக்க முயன்ற வாகன ஓட்டி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு அவரை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி!