தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் இவருடைய மகன் மணிகண்டன் பொறியியல் பட்டப்படிப்பில் முதுகலை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.
இவரின் தந்தை செய்து வரும் நெல் விவசாயத்தில் அறுவடைக் காலங்களில் பெய்யும் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டு வந்ததைக் கண்ட பொறியியல் பட்டதாரி தீர்வு காணும் வகையில் புதிய இயந்திரத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டார்.
இதற்காக ’புரொடக்ஷன் காம் இனவேசன்’ என்ற நிறுவனத்தைக் கடந்த மே மாதத்தில் ஆரம்பித்து புதிய இயந்திரம் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு அதற்கான தீர்வையும் கண்டுள்ளார். இவர் கண்டுபிடித்த இயந்திரமானது அறுவடைக் காலங்களில் நெல் மழையில் நனைவதால் அதிக ஈரப்பதம் ஏற்படும் நேரங்களில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி நெல்லை உலர்த்தி பதப்படுத்த முடியும்.
மேலும் வயல்வெளிகளில் வைக்கோல்களை உணர்த்தவும், நெல்லை வேக வைத்து உலர்த்தி அரிசியாகவும் இந்த பொறியியல் பட்டதாரி கண்டுபிடித்த இயந்திரத்தில் செய்ய முடியும். மேலும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தின் மூலம் ஏலக்காய், மிளகு, மஞ்சள், பூண்டு, தக்காளி உள்ளிட்ட விவசாய விளைப் பொருட்களை உலர்த்தி அதன் பின்பு பதப்படுத்தி பின்பு மதிப்புக் கூட்டுப் பொருளாகவும் மாற்றப் பயன்படுத்தப்படுகிறது.
இவர் கண்டுபிடித்த இயந்திரத்திற்கு ஏற்கனவே தமிழக அரசு கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோருக்கான விருது வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் கீழ் உணவுப்பொருள் உலர்த்துதல் மற்றும் பதப்படுத்துதல் குறித்து புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி இந்திய அளவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்பு இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த போட்டியில் பொறியியல் பட்டதாரி மணிகண்டன் கண்டுபிடிப்பும் இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் இறுதியாகத் தமிழகம் சார்பாகப் பங்கேற்ற மணிகண்டனின் கண்டுபிடிப்பு முதல் இடம் பிடித்தது. மேலும் இவர் கண்டுபிடித்த இயந்திரம் விவசாயிகளுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இவருடைய கண்டுபிடிப்பைப் பாராட்டி இளம் தொழில் முனைவோருக்கான விருதினை வழங்கி உள்ளார்.
கிராம மக்கள் பாராட்டு: மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற பொறியியல் பட்டதாரியான மணிகண்டனுக்குப் பாராட்டு விழா நடத்தினர்.இந்த விழாவிற்கு வருகை தந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் நீண்ட வரிசையில் நின்று மாலை மற்றும் சால்வை அணிவித்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு தனி விண்வெளி மையம் - அடுத்த ஆண்டு பாரதிய விண்வெளி மைய பணி துவக்கம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!