தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே முத்தலாம்பாறை ஊராட்சிக்குட்பட்ட உப்புத்துறை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், ஆற்று நீர் செல்லும் ஓடை வழியாக உடல்களை சுமந்து சென்று அடக்கம் செய்து வந்தனர். ஓடையில் தண்ணீர் அதிகம் வந்தால் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இதனால் மயானத்திற்கு செல்ல பாதை வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில், வருவாய் அலுவலர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுத்து மயானத்திற்கு பாதை அமைத்துக் கொடுத்தனர்.
இந்நிலையில் மயானத்திற்கு செல்லும் பாதையை அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பாதையை அடைத்து வைத்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், மீண்டும் பொதுப் பாதையை பயன்படுத்த முடியாமல் ஓடை வழியாக செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து வருவாய் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தால் உடலை அடக்கம் செய்யும் நேரம் மட்டும் போலீசார் பாதுகாப்புடன் மயானத்திற்கு செல்ல அனுமதிப்பதாகவும், மற்ற நேரங்களில் பாதையை அடைத்து வைத்து மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : பல்லடம் மூவர் படுகொலை வழக்கு: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர அதிமுக எம்.எல்.ஏ கடிதம்..
இந்நிலையில் உப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரிடம் மயானத்திற்கு செல்லும் பாதையை மீட்டுத் தரும்படி கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மணி கூறுகையில், "தாத்தா, பாட்டி காலத்தில் இருந்து எங்கள் ஊரில் சுடுகாடு இருந்தது. இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை மூன்று குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டார்கள். தற்போது சுடுகாட்டிற்கு பாதை கேட்டு நாங்கள் வந்திருக்கிறோம். பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என யார் சென்றாலும் அந்த பாதை வழியாக தான் வரவேண்டும்.
உயிரிழந்தவர்களை அந்த பாதை வழியாக தான் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், அந்த பாதையை பயன்படுத்த விடமாட்டடேன் என்கிறார்கள். காவல்துறை வரும்போது மட்டுமே பாதையை திறந்து வைக்கிறார்கள். மற்ற நேரங்களில் பாதையை அடைத்து வைத்து விடுகிறார்கள். எங்களுக்கு ரொம்ப சிரமமாக இருக்கிறது. ஆக்கிரமிப்பு பாதையை மீட்டுத் தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று மணி தெரிவித்தார்.