தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராமம், ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர் அதிகம் வசிக்கும் கிராமமாகும். இந்த கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மீன் கழிவு ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப்புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், மீன் கழிவு நிறுவனங்கள் தங்கள் கழிவுகளை அருகே உள்ள குளங்களில் கொட்டுவதாலும், விளைநிலங்களில் கழிவுகளை லாரிகள் மூலம் இரவு நேரங்களில் திறந்து விடுவதாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, அந்தப் பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்டவை, அந்த கழிவுகளை தின்று இறக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது எனவும், இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி, கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொட்டலூரணி கிராம மக்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்து, கிராமத்தில் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்புக் கொடிகளை கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில், அந்த கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால், பொட்டலூரணி வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொட்டலூரணி கிராம மக்கள் கிராமத்தில் கருப்பு கொடி ஏந்தி கண்டண கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: படகில் வந்து ஆர்வமுடன் வாக்களித்த பழங்குடியின மக்கள்! - Lok Sabha Election 2024