தேனி : தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேமுதிக கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
மறைந்த விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, கட்சியின் 20ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய விஜயபிரபாகரன், "என் தம்பி சண்முகபாண்டியன் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது. நான் படப்பிடிப்பிற்கு வர வேண்டும் என என் தம்பியும், இயக்குனர் பொன்ராமும் கேட்டுக் கொண்டதால் தேனி வந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். இதுவே மற்ற கட்சி கூட்டம் என்றால் ரூ. 100, சோறு, பீர் கொடுத்தால் தான் அங்கு கூட்டம் கூடும். ஆனால், இங்கு இது எதுவும் கொடுக்காமல் ஏராளமான தொண்டர்கள் கூடியுள்ளனர்.
செழிப்பாக இருந்த தேனி மாவட்டம், தற்போது திமுக ஆட்சி வந்ததும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இங்கு இருக்கின்ற திமுக சேர்மன் மற்றும் திமுக எம்எல்ஏ கொடைக்கானலில் இருந்து பெரியகுளத்திற்கு வருகிற தண்ணீரைத் தடுக்கின்றனர். 'வெள்ளையனே வெளியேறு' என்று போராடி காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். ஆனால் இன்று 'கொள்ளையனே வெளியேறு' என்று நாம் போராடி வருகிறோம்.
இதையும் படிங்க : “உதயநிதி துணை முதல்வரானதுதான் உலகத்திலேயே கொடிய சனாதனம்” - சீமான் கடும் விமர்சனம்!
முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்து விட்டு பின்பு, ஊடகம் முன்பு பாஜக அரசு மைனாரட்டி அரசு என கூறுகிறார். அதை பிரதமரிடம் சொல்ல அவருக்கு திராணியில்லை. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு எதற்கு அமைச்சர் பதவி? மக்கள் போராட்டத்திற்காக சிறை சென்றாரா? மக்களுக்காக சிறை சென்றாரா? ஸ்டாலின் போட்ட வழக்கில் அவரது அமைச்சரே சிறைக்குச் சென்றுள்ளார்.
விஜயகாந்த் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்தான் இன்றைக்கு முதலமைச்சர் என்று கூறும் மக்கள் விஜயகாந்த் இருந்தபோது எங்கே போனார்கள்?. திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டை வரவேற்கிறோம். ஆனால் உங்கள் கூட்டணியில் உள்ள ஸ்டாலினிடம் ஏன் கோரிக்கை வைக்கவில்லை இதெல்லாம் நாடக அரசியல்.
அதிமுக வாக்கு வங்கி குறைந்து விட்டது. இளைஞர்கள் உழைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். எடப்பாடி பழனிசாமி சொன்னால் போதும் உழைப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். யார் எந்த பதவிக்கு வரட்டும், யார் எந்த கட்சியும் ஆரம்பிக்கட்டும். ஆனால், இன்றைக்கும் 'நீ பொட்டு வச்ச தங்க குடம்' விஜயகாந்த் பாட்டு தான் ஹிட் அதுதான் வைரல். திமுக நடத்திய ஃபார்முலா பந்தயத்தை விட எங்கள் கட்சியின் வேகத்தை யாராலும் பிடிக்க முடியாது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்