சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா இரண்டாம் கட்டமாக சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய கட்சியின் தலைவரான நடிகர் விஜய், 'ஒன்றிய அரசு' எனக் குறிப்பிட்டு நீட்டுக்கு எதிரான காரசார கருத்துக்களை முன்வைத்தார்.
விழாவில் விஜய் பேசியதாவது; '' வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய பணிவான வணக்கங்கள். நான் இன்றைக்கு எதுவும் பேச வேண்டாம் என நினைத்தேன்.. ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச நினைக்கிறேன்.. அப்படி பேசவில்லை என்றால் அது கரெக்டாக இருக்காது என நினைக்கிறேன்.. அது என்னவென்று நீங்களே நினைத்து இருப்பீர்கள் 'நீட் தேர்வு'.
'' நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகள் குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஏழை, எளிய மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவ, மாணவிகள் எல்லாம் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை. மாநில மொழியில் படித்துவிட்டு, மற்ற சிலபஸில் தேர்வு வைத்தால் எப்படி? அதுவும் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மாணவ, மாணவிகளின் மருத்துவப்படிப்பிற்கு எவ்வளவு கடினமானதாக நீட் இருக்கும். மாநில உரிமைக்காக மட்டுமல்ல, கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பார்வைகள் இருக்கிறது அதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்..பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல..
நீட் விலக்கு தான் இதற்கு உடனடி தீர்வு.. நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்த தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உடனடியாக இதை தீர்க்க வேண்டும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். சிறப்பு பொது பட்டியல் உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.
இப்போது இருக்கும் பொது பட்டியலில் உள்ள பிரச்சனை, துறைகளில் மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளான எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களுக்கு வேண்டுமானால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம் . இது உடனே நடக்காது என தெரியும், அப்படியே நடக்க விடமாட்டார்கள் என்பதும் தெரியும்'' என விஜய் பேசினார்.
இதையும் படிங்க: த.வெ.க. கல்வி விருது விழா: 2ஆம் கட்டமாக இன்று மாணவர்களை சந்திக்கும் விஜய்!