விழுப்புரம்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, அக்டோபர் 27ஆன் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று (அக்.4) காலை மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா பூமி பூஜையுடன் தொடங்கியது. இதில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கலந்து கொண்டார். மேலும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு 27ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில், மாநாடு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தொடங்கினார்.
தொடர்ந்து, மாநாடு நடைபெறும் வி.சாலை கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மாநாட்டுத் திடலுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்து இன்று அதிகாலை 4 மணியளவில் பூமி பூமி பூஜை செய்தனர்.
இதையும் படிங்க: நெல்லை டூ விக்கிரவாண்டி..விஜய் மாநாடு வெற்றி பெற த.வெ.க. நிர்வாகிகள் புனித யாத்திரை!
இதனையடுத்து, பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், செங்கல்பட்டு புகழ் பெற்ற கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீரை எடுத்து வந்து, மாநாட்டு திடலில் உள்ள பந்தக் காலில் ஊற்றினர்.