சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் தனது திரை வாழ்வின் உச்சத்தில் இருக்கும் போதே அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்தார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.
இதனைத்தொடர்ந்து த.வெ.க சார்பில் வெளியான அறிக்கையில் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார். மேலும் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று விஜய் தவெக கொடியை அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக கடந்த 19ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறம், நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்த வீடியோ வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று தனது த.வெ.க கொடியை அறிமுகம் செய்து, கட்சிப் பாடலையும் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட த.வெ.க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்வில் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர், அம்மா ஷோபா ஆகியோரும் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து பேசிய நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய், ”நீங்கள் எல்லாம் கொண்டாடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாடு மக்கள் அனைவரது முன்பும் இன்று நமது கழக கொடியை அறிமுகப்படுத்துவதில் பெருமையாக கருதுகிறேன்.
புயலுக்கு பின் அமைதி என்று சொல்வார்கள். அதேபோல் இந்த கொடிக்கு பின் வரலாறு உள்ளது. அதன் வரலாறு மற்றும் கட்சி கொள்கைக்கான விளக்கத்தை கட்சி மாநாட்டில் அறிவிப்பேன். த.வெ.க முதல் மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டிற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான கொடியாக இதை பார்க்கிறேன். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். கொடியை அறிமுகப்படுத்தியதில் மிகவும் பெருமை. வரும் நாட்களில் கட்சி ரீதியாக நாம் தயார்படுத்த வேண்டும். இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் உழைக்க வேண்டும்” என்று பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: த.வெ.க. கொடிக்கான வரலாறு.. விழா மேடையில் விஜய் கூறியது என்ன? - tamizhaga vettri kazhagam Flag