சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவின் முதற்கட்ட நிகழ்வு கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பரிசுத்தொகை அளித்து கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் 802 மாணவர்கள் கலந்து கொண்டு விஜய்யிடம் பரிசுத்தொகை பெற்று மகிழ்ந்தனர். இந்நிலையில் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்ட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களை சேர்ந்த தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 740க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொள்கின்றனர்.
கடந்த ஜூன் 28ஆம் தேதி பரிசுத்தொகை பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோரக்ளுக்கு கமகமக்கும் சைவ விருந்து தயார் செய்யப்பட்டது. அதேபோல் இன்று பரிசுத்தொகை பெறும் 740க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் சைவ விருந்து பரிமாறப்படவுள்ளது.
இதுகுறித்து கல்வி விருது விழா நிகழ்வில் உணவு தயார் செய்யும் கேட்டரிங் உரிமையாளர் ரவி நமது செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த விருந்தில் மலாய் சாண்ட்விச், ஆக்ரா பான் ஸ்வீட், அவியல், வெங்காய மணிலா பக்கோடா, வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல் உள்ளிட்ட வெவ்வேறு விதமான உணவுகளை நாங்கள் சமைக்கிறோம். பாண்டிச்சேரியை சேர்ந்த நாங்கள், 45 வருட காலமாக சமையல் துறையில் பணியாற்றி வருகிறோம்.
மேலும் விஜய்யுடன் எவ்வாறு பழக்கம் எற்பட்டது என கேட்டபோது, பாண்டிச்சேரியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருமணத்தில் நாங்கள் சமையல் செய்தோம். அப்போது அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொண்ட போது எங்களது சமையல் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் எங்களுக்கு இந்த கேட்டரிங் ஆர்டரை வழங்கினார். இந்த நிகழ்வில் சமையல் செய்வதற்கு 50 பேர் உள்ளனர். உணவு பரிமாற 250 பேர் உள்ளனர். மொத்தமாக இந்த நிகழ்வில் 4000 பேருக்கு சமைத்துள்ளோம். அடுத்தடுத்த விழாக்களிலும் விஜய் எங்களுக்கே கேட்டரிங் ஆர்டர் கொடுப்பார் என நம்புகிறோம்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: த.வெ.க. கல்வி விருது விழா: 2ஆம் கட்டமாக இன்று மாணவர்களை சந்திக்கும் விஜய்! - Vijay Education Award Event