சென்னை: முன்னணி திரைப்பட நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்யின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் பகுதியில் உழவர் சந்தை அருகில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன் 22) நடைபெற்றது.
சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், நடிகர் சௌந்தர், நடிகர் ஸ்ரீமத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 2000-க்கும் மேற்பட்டோருக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, கேஸ் ஸ்டவ், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதேபோல, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அடுத்ததாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு 5,000 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கப்பட்டது.
இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஸ்ரீநாத், "இந்தியாவிலே தற்போது அதிக சம்பளம் பெறக்கூடிய ஒரே நடிகர் என்றால் தளபதி விஜய் தான் என்றும்; ஆனால், அவற்றை விட்டுவிட்டு மக்கள் பணியாற்றுவதற்காக அரசியலில் ஈடுப்பட்டுள்ளது, ஒரு நண்பனாக என்னைவிட ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் அதிக பெருமை" எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் சிறுவர்களுடன் விஜய் போல் வேடம் அணிந்து வந்த நபர் நடனம் ஆடியது ரசிகர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை என அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளைய தீர்ப்பு முதல் நாளைய முதல்வர் வரை.. நடிகர் விஜயின் 50வது பிறந்தநாள் ஸ்பெஷல்!