விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள் மற்றும் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் 18 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகழாய்வு பணிகளில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டு, உடைந்த நிலையிலான சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச்சில்லு, தங்கமணிகள் என இதுவரை 2600க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் புதிதாக தோண்டப்பட்ட குழியிலும் விரலால் சுண்டி விளையாடப்படும் சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருள், சங்கு வளையல்கள், ஆணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (டிசம்பர் 4) புதன்கிழமை புதிதாக தோண்டப்பட்ட குழியில் சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெம்பக்கோட்டை அகழாய்வில் விளையாட்டுப் பொருட்கள் கண்டெடுப்பு - ஆய்வாளர் கூறுவதென்ன?
இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், “3-ஆம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள் மற்றும் சங்கு வலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முன்னோர்கள் அணிகலன்களுக்கும், அழகிருக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தொழில்கள் நடந்ததற்கு சான்றாக பல்வேறு அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.