வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட போக்குவரத்து துறை டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர்.2) வேலூர் மாநகரத்துக்குட்பட்ட மக்கான் சிக்னல், கிரீன் சர்க்கிள், செல்வி அம்மன் ஆலயம் அருகே என பல்வேறு இடங்களில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு நபரும் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு பேனா, கீ செயின், பொம்மைகளை பரிசாக வழங்கினர்.
மேலும், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை இயக்கி வருபவர்களிடம் வாகன எண்ணை செல்போனில் படம் பிடித்தும், போக்குவரத்து டிராபிக் சிக்னலில் உள்ள (ANPR - ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் ) கேமரா மூலம் ஹெல்மெட் அணியாமல் வந்த 500க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5000; புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
அப்போது, வேலூர் புதிய பேருந்து நிலையம், செல்வி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு வழி பாதையான பாலாற்று மேம்பாலத்தின் மேல் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருப்பதை கண்ட ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் அவர்கள் வந்த ஒரு வழி பாதையில் திடீரென வாகனத்தை திரும்பிச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் இன்று ஹெல்மெட் அணியாமல் வந்த 500 பேரிடம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நாடகம், விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கினர்.