வேலூர்: பேரணாம்பட்டு அருகில் உள்ள பெரிய தாமல் செருவு என்னும் கிராமத்தில், சரவணன் என்பவர் தன் சொந்த நிலத்தில் ஆட்டுக்கொட்டகை வைத்துள்ளார். இந்நிலையில், திடீரென நேற்று இரவு சிறுத்தை ஒன்று ஆட்டு கொட்டகைக்குள்ளே புகுந்து ஆட்டின் கழுத்தை கடித்து, அதன் ரத்தத்தை குடித்துள்ளது. இதைக் கண்டு நிலத்தில் இருந்த நாய்கள் கத்தியதில், ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு சிறுத்தை தப்பி ஓடி உள்ளது. இவை நிலத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இது குறித்து நில உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், “சிறுத்தை அவ்வப்பொழுது நிலத்திற்கு வந்து ஆடுகளை கடித்து, இழுத்துச் செல்வது வழக்கமாகிவிட்டது. மேலும், இங்கு மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளில் பலவற்றை சிறுத்தை கடித்து இழுத்துச் சென்றுள்ளது. இதுவரை சிறுத்தையினால் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்து” உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இங்கு பிரசித்தி பெற்ற சிவன் கோயில் ஒன்று அமைந்திருப்பதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாட்களில் வருகின்றனர். அவர்களுக்கு சிறுத்தையினால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, சிறுத்தையைப் பிடித்து மற்றொரு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விட்டுவிட வேண்டும் என அப்பகுதி மக்களும், பக்தர்களும் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:மூக்கைத் துளைத்த மாம்பழம் வாசனை! மரத்தில் ஏற முயன்ற யானையின் வீடியோ வைரல்