வேலூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் சுயேட்சை சின்னமான பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், மன்சூர் அலிகான் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், கடைசி நாளான இன்று ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, குடியாத்தம் பகுதிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள சென்றுள்ளார்.
அப்போது, மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சி நிர்வாகிகள், உடனடியாக அவரை, குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது, இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக, வாணியம்பாடியில் நடிகர் மன்சூர் அலிகான் பலாப்பழக் கடையில் பலாப்பழம் விற்று, தனது இறுதி பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், “அனைத்து சமுதாய மக்களுக்குமானவன் நான், கொளுத்தும் வெயிலில் தன்னந்தனியாக கை காசுகளை செலவழித்துப் போராடுகிறேன்.
எனது சின்னம் பலாப்பழம், இந்த பலாவின் சுவை போன்று, உங்களுக்கு நான் இனிப்பாக வேலை செய்வேன், இங்கு இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குவேன், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன், பாலாறுகளில் தண்ணீர் வர வழிசெய்வேன், அன்பின் அடிமையாக மக்களுக்கு வேலை செய்வேன். மக்களும் என்னை ஆதரிக்கிறார்கள். அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நான் அனைத்து மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வது உறுதி” என்றார்.