வேலூர்: தமிழகத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பல நலத்திட்ட உதவிகளை திமுகவினர் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூரில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியின் திமுக செயலாளர்களான வன்னிய ராஜா, சுனில் குமார் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் 600 பேருக்கு புத்தாடைகள் மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சியின் அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கதிர் ஆனந்த் கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது போல் எனக்கும் தேர்தல் கணிப்புகளில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. மக்கள் சரியான முடிவு எடுத்திருப்பார்கள். இன்னும் 24 மணி நேரம் பொறுத்துக் கொண்டால் ஒரு நல்ல முடிவு தெரியவரும்” எனக் கூறினார். மேலும், தமிழக மக்கள் கண்டிப்பாக திமுகவிற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவு கொடுத்து இருப்பார்கள். எனவே ’இந்தியா’ கூட்டணி ஆளும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "தபால் வாக்குகளை முதலில் முதலில் எண்ணுங்கள்" - காங்கிரஸ் கூறும் காரணம் என்ன?