வேலூர்: பெரிய சித்தேரி பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர், தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன், இவரது செல்போனுக்கு பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போலியான இணைய இணைப்பு ஒன்றை மர்ம நபர் அனுப்பியதன் மூலம், விவரங்களை பெற்று இவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 25 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டது.
இதேபோல், வேலூர் பகுதியைச் சேர்ந்த சென்னையில் சிமெண்ட் நிறுவன ஊழியரான முகமது தெப்பீக் என்பவர் கிரெடிட் கார்டு லிமிட்டை அறிமுகப்படுத்தி தருவதாக வந்த அழைப்பை நம்பி ரூ. 38 ஆயிரம் பணத்தையும், குஜராத்தில் இருந்து தேர்தல் பணிக்காக வந்த சிஐஎஸ்எப் வீரர் சுஷாந்த் நாயக் என்பவரின் கிரெடிட் கார்டிலிருந்து ஆன்லைன் லிங்க் மூலம் ரூ. 70 ஆயிரம், பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த இளவரசனிடம் 18 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் மாவட்ட சைபர் குற்றறப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், 4 பேர் இழந்த ரூபாய் ஒரு லட்சத்து 51 ஆயிரம் தொகை முழுவதும் மீட்டுள்ளனர். இதையடுத்து, இந்த தொகைகள் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் முன்னிலையில், பாதிக்கப்பட்ட நபர்களிடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் என்.கோட்டீஸ்வரன், காவல் ஆய்வாளர் கி.புனிதா, காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், பெண் தலைமை காவலர் மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.