சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலைக்குள் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், சென்னை பெரம்பூரில் அவரது உடல், கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்றேன். அவருடைய இறப்பு நமக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது. இந்த படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் கட்சி தலைவரை படுகொலை செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி வருகை தந்து அஞ்சலி செலுத்தி சென்றுள்ளார். கட்சிக்கு விசுவாசமாகவும், மக்களுக்கு நம்பிக்கை கொண்டவாராகவும் ஆம்ஸ்ட்ராங் இருந்தார். எனக்கு உற்ற துணையாக இருந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவர்களை நேசிக்க கூடியவர். அவர் மீது எந்த வழக்கும் இல்லை ஆனால் ஏதோ ஒரு வழக்கில் அவரை தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என உறவினர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கூறுகின்றனர். இதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்" என்று திருமாவளவன் பேசினார்.