சென்னை: டெல்லியில் ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டதாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை ஜெய்ப்பூரில் வைத்து மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாபர் சாதிக்கிடம் மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஜாபார் சாதிக் இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் போதைப் பொருள் கடத்தியது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் டெல்லியிலிருந்து இவர் போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்தது தெரியவந்துள்ளதாகவும், இந்த போதைப் பொருள் கடத்தல் மூலமாகச் சுமார் 2500 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டியதும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை எந்தத் தொழிலில் முதலீடு செய்துள்ளார்? யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார்? என்ற விவரங்களைக் கணக்கெடுக்கும் நோக்கில் ஏழு நாட்கள் காவலில் எடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுமட்டும் அல்லாது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகளும், ஜாபர் சாதிக் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக இவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், தேங்காய் பவுடர் எனக்கூறிக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எப்படி போதைப் பொருள் கடத்தினார்? ஜாபார் சாதிக்கிற்கு, இந்த நாடுகளில் எப்படி நெட்வொர்க் உருவாகியது? மற்றும் போதைப் பொருள் கடத்தலில் யாரெல்லாம் உதவி செய்தார்கள்?என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தவிர்த்து, திரைப்படங்கள் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இவர் போதைப் பொருள் கடத்தல் மூலமாக, சம்பாதித்த பணத்தை முதலீடு செய்துள்ளார் என்பதையும் வேறு எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளார் என்பதையும் கண்டறிந்து முடக்கம் செய்யும் நடவடிக்கைகளிலும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இவர்கள் வெளிநாடுகளில் யார் மூலமாக இந்த போதைப் பொருட்களைக் கடத்துகிறார்கள் என்பதைக் கண்டறிய வெளிநாட்டு ஏர்ஜென்சிகளிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அந்நாட்டுப் போதைப் பொருள் கடத்தல் கும்பலையும் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் வெளிநாட்டு ஏஜென்சிகளும் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: புதுக்கோட்டை அருகே ரூ.111.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!