திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த பெரியப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாவேந்தன். இவர் வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் ஆரணி அரிசி மண்டி என்ற அரிசி கடை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வாணியம்பாடியைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் அவ்வப்போது அரிசி வாங்கிய நிலையில், அதற்கு காசோலை மூலம் பணம் அளிப்பதாகக் கூறி வந்துள்ளார்.
இதனை நம்பிய பாவேந்தனும், தனது அரிசி மண்டியிலிருந்து அவருக்கு ஒவ்வொரு முறையும் அரிசி வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பல நாட்களுக்கு பின்னர் செந்தில்நாதன் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை பாவேந்தனிடம் அளித்துள்ளார். அந்த காசோலையை பெற்ற பாவேந்தனும், அதனை வங்கிக்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால், அந்த காசோலையின் வங்கிக் கணக்கில் பணம் ஏதும் இல்லாததாக வங்கியில் கூறப்பட்டுள்ளது.
இதன் பின்னரே, காசோலையைக் கொடுத்துவிட்டு செந்தில்நாதன் தலைமறைவான விஷயம் பாவேந்தனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், செந்தில்நாதன் மீது வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தலைமறைவான செந்தில்நாதன் மீது 9 ஆண்டுகளாக இவ்வழக்கு வாணியம்பாடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தலைமறைவான செந்தில்நாதனைப் பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் அளித்தது.
இதையடுத்து, வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் செந்தில்நாதனை பல இடங்களில் வலைவீசித் தேடிவந்தனர். இந்நிலையில், செந்தில்நாதன் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. எனவே, பெங்களூர் சென்ற வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான காவல்துறையினர், ரூ.50 லட்சம் காசோலை மோசடி வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த செந்தில்நாதனை கைது செய்தனர். பின்னர், ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மூதாட்டியை கடித்து குதறிய முதலை.. அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி - A Crocodile Bit An Old Woman In TN