கோயம்புத்தூர்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 554 ரயில் நிலையங்கள் மறுசீரமைத்தல் மற்றும் மேம்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று (பிப்.26) காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இதன் ஒரு பகுதியாகக் கோவை மற்றும் வட கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற அலுவலகம் தொடர்பாக ஐஎஸ்ஓ சான்றிதழ் சர்ச்சைக்குள்ளானது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானும் அதைப் பார்த்தேன், எந்த நிறுவனம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்குவதற்குத் தகுதியானது என்று நீங்கள் நினைக்கும் அந்த நிறுவனத்தை எனது அலுவலகத்திற்கு அனுப்புங்கள்" என்று பதிலளித்தார்.
பாஜக-வில் பிற அரசியல் கட்சியினர் இணைவதற்குப் பின்னணியில் பண பேரம் நடைபெறுவதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, "பாஜக-வில் இணையும் பிற அரசியல் கட்சியினர் அனைவரும் எங்களது கட்சியின் கொள்கை, செயல்பாடுகள் ஆகியவற்றைப் பிடித்து வருகின்றனர். இதைப் பொறுக்க முடியாமல் சிலர் பாஜக-வில் பிற அரசியல் கட்சியினர் இணைவதற்குப் பின்னணியில் பண பேரம் நடைபெறுவதாகக் கூறுவார்கள்.
மேலும், மற்ற கட்சியினரை இழுக்கிறோம் என்றால் அவர்களின் விருப்பம் இல்லாமல் வர முடியாது. அடுத்தும் பாஜக ஆட்சிதான் அமையப் போகின்றது என்பதை உணர்த்து இருக்கின்றனர். பாஜக-வில் இணைந்தால் அரசியல் லட்சியங்களை நிறைவேற்ற முடியும் என்பதால் இணைகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக பாஜக-வில் இனைந்த விஜயதாரணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்த விஜயதாரணிக்கு உழைப்பு, திறமை அடிப்படையில் பாஜக-வில் அங்கீகாரம் கிடைக்கும். காங்கிரஸ் கட்சியில் மக்கள் பிரதிநிதியாக இருந்து மன அழுத்தம், உட்கட்சி பிரச்சினை போன்ற காரணங்களால் இங்கே வந்திருக்கலாம்" என்று பதிலளித்தார்.
இதனை அடுத்து பிரதமர் மோடியின் கோவை வருகை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "மோடி வருகையால் பாஜகவினர் பயங்கர உற்சாகத்துடன் இருக்கின்றனர். இப்போதே கூட்டம் நடைபெறும் இடத்திற்கு மக்கள் வரத் துவங்கி விட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராகக் கருப்பு கொடி, கருப்பு பலூன் காட்டியவர்கள் இன்று வரவேற்க நின்று கொண்டிருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.
மதுரை செல்லும் பிரதமர் மோடி எய்ம்ஸ் குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்குப் பல முறை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள் எனவும் ஒரு செங்கல்லை வைத்து 3 வருடமாகச் சுற்றிக் கொண்டு இருந்தவர்கள் ஏன் எய்ம்ஸ்க்கு எதுவும் செய்யவில்லை" எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பாலாற்றின் குறுக்கே தடுப்பணைக்கட்ட துடிக்கும் ஆந்திர அரசு; விரைந்து நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்!