கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில் குப்பைக்கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்கு மருதமலையை ஒட்டியே இருப்பதால் அங்கிருந்து வெளியேறும் வனவிலங்குகள் குப்பைகளை உண்ணும் அவலம் ஏற்படுவதால் அந்த குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று அந்த குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பற்றியது. சிறிதாக எழுந்த தீ படபடவென அதிக அளவில் பரவியதால் அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுளார். அதில், “சோமையம்பாளையம் கிராமத்தில் குப்பை கிடங்கு ஒன்று இருக்கிறது. அங்குதான் கிராம மக்கள் சேகரிக்கப்படும் குப்பைகள் தினந்தோறும் கொட்டி வருகின்றனர். இந்த குப்பை கிடங்கானது, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய மலையடிவார பகுதியில் அமைந்து வருவதால், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வரும்போது அந்த குப்பை கிடங்கில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளான நாப்கின், மாஸ்க் போன்ற ஆபத்தான கழிவுகள் உண்டு உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த குப்பை வாசனையால் யானை போன்ற வனவிலங்குகள் ஈர்க்கப்பட்டு குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் வந்து அட்டகாசம் செய்கினறனர். என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி எழில் கொஞ்சும் மருதமலையின் இயக்கை வாய்ந்த சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சோமையம்பாளையம் குப்பை கிடங்கை உடனடியாக அகற்ற வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும் கழிவு மேலாண்மையில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரான்ஸ் மக்களவைத் தேர்தல்; புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!